மியான்மர் வன்முறையில் 1,000 பேர் பலி: ஐ.நா. பிரதிநிதி தகவல்

மியான்மரில் ரோஹிங்கயா பிரிவினருக்கு எதிரான வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என்று அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் யாங்கீ லீ கூறியுள்ளார்.
மியான்மரிலிருந்து நாஃப் நதியைக் கடந்து வங்கதேசத்தின் டெக்நாஃப் பகுதிக்கு கால்நடையாக வரும் ரோஹிங்கயா அகதிகள்.
மியான்மரிலிருந்து நாஃப் நதியைக் கடந்து வங்கதேசத்தின் டெக்நாஃப் பகுதிக்கு கால்நடையாக வரும் ரோஹிங்கயா அகதிகள்.

மியான்மரில் ரோஹிங்கயா பிரிவினருக்கு எதிரான வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என்று அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் யாங்கீ லீ கூறியுள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த அவர் சியோலில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறியது: கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து நிகழ்ந்து வரும் ரோஹிங்கயா பிரிவினர் தொடர்பான வன்முறையில் 475 பேர் இறந்ததாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மியான்மர் அரசு பலி எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது எனத் தோன்றுகிறது. பலி எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருத இடமிருக்கிறது. அப்பிரிவினர் தலைமுறைகளாக வசித்து வரும் இடங்களில் பல கிராமங்களில் அனைத்து வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. உயிர் பிழைத்து வெளியேறியவர்கள் கூற்றின்படி, பல ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த இரு வார காலத்தில் மட்டும் 1.64 லட்சம் ரோஹிங்கயாக்கள் மியான்மரைவிட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். எல்லைப்புறத்தில் உள்ள நாஃப் நதியை நீந்திக் கடந்து வங்கதேசம் வரும் முயற்சியில் ஏராளமானோர் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது, பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்று கருத இடமிருக்கிறது என்றார் அவர்.
பல தலைமுறைகளாக மியான்மரின் ரெகினே மாகாணத்தில் முஸ்லிம் பிரிவினரான ரோஹிங்கயாக்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், ரோஹிங்கயாக்கள் இடையே தீவிரவாதம் எழுந்து அவ்வப்போது பாதுகாப்புப் படையினருடன் மோதல் நிகழ்ந்து வந்தது.
ரெகினே மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமிலும் காவல் துறை சோதனைச் சாவடிகளிலும் கடந்த ஆக.25 தேதி நிகழ்ந்த ஒருங்கிணைந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் 59 தீவிரவாதிகளும் பலியாகினர். இதைத் தொடர்ந்து ரோஹிங்கயாக்கள் வசிக்கும் கிராமங்களில் ராணுவத்தினர் தீவைப்பு, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிருக்கு பயந்து எல்லை கடந்து வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். சென்ற இரு வாரங்களில் சுமார் 1.64 லட்சம் பேர் இவ்வாறு வெளியேறி வங்கதேசத்துக்குள் வந்ததாக ஐ.நா. கூறியுள்ளது. மியான்மர் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, 430 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; 15 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், துப்பாக்கிச் சண்டையின் இடையில் சிக்கி 30 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் தற்போது 2.7 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் விவியன் டான் கூறியுள்ளார். அகதி முகாம்கள் நிரம்பி வழிவதால், தெருவோரங்களிலும் வெட்டவெளிகளிலும் அவர்கள் தங்கியுள்ளனர் என்றார் அவர்.
தினசரி ஆயிரக்கணக்கான ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மருக்கு இழுக்கு: ஷேக் ஹசீனா
 மியான்மரிலிருந்து பெரும் எண்ணிக்கையில் அகதிகள் வெளியேறி வருவது அந்த நாட்டின் பெருமைக்கு இழுக்கு என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.
வங்கதேசத்தின் ஆளும்கட்சியான அவாமி லீகின் உயர்நிலைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:
அண்டை நாடான மியான்மரில் நிகழ்ந்து வரும் வன்முறையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அகதிகள் வெளியேறி வங்கதேசத்துக்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு இயன்றவரை உதவியளித்து, மனிதாபிமானத்துடன் நடத்துவோம். ஆனால் இவர்கள் அனைவரையும் விரைவில் மியான்மர் திருப்பி அழைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். மியான்மரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு காரணத்தால் அகதிகளாக வெளியேறுவது அந்த நாட்டின் பெருமைக்கு இழுக்காகும். உலக நாடுகள் தலையிட்டு இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்றார் அவர்.
வங்கதேச எல்லைப் பகுதியில் ஏற்கெனவே மியான்மரிலிருந்து வெளியேறிய ரோஹிங்கயா அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. தற்போது மிக அதிக எண்ணிக்கையில் அகதிகள் வந்து கொண்டிருப்பதால் அவர்களை ஏற்று புகலிட வசதிகள் செய்து தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று வங்கதேச அரசு ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது.
அகதிகள் விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு, அவர்களை விரைவில் மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முயற்சியெடுக்க வேண்டும் என்று வங்கதேச அரசு கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com