அமெரிக்காவில் சுற்றுப் பயணம் தொடங்கினார் ராகுல்

அமெரிக்காவில் தனது இரண்டு வாரச் சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தொடங்கினார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் தொடங்கினார் ராகுல்

அமெரிக்காவில் தனது இரண்டு வாரச் சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தொடங்கினார்.
இதற்காக கலிஃபோர்னியா மாகாணம், சான் ஃபிரான்சிஸ்கோ நகர விமான நிலையம் வந்திறங்கிய அவரை, மூத்த காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, சர்வதேச காங்கிரஸ் கட்சி (ஐஎன்ஓசி) தலைவர் சுத் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மது கெüட் யஷ்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, பண்டித ஜவாஹர்லால் நேரு கடந்த 1949-ஆம் ஆண்டு உரையாற்றிய பார்க்லீ நகரின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார்.
இந்தியாவின் ஜனநாயகமும், பன்முகத் தன்மையும் ஆபத்தில் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இந்தப் பண்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் எதிர்காலத்திட்டங்கள் குறித்து ராகுல் காந்தி உரையாற்றுவார். தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, அந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து, நாட்டு நலனுக்கான பல்வேறு விவகாரங்களை அவர் விவாதிப்பார். மேலும், அரசியல் நிபுணர்கள், அரசியல் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்றார் மது கெüட் யஷ்கி.
இதற்கிடையே, ராகுல் காந்தி உரையாற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக அரங்கின் இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், அந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவை முடித்துக் கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சமகால இந்தியா குறித்த எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதை முன்னெடுத்துச் செல்வது குறித்து எடுத்துரைக்கவுமே ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் ஒப்பிடுகையில் அதில் 0.0001 சதவீதம் என்ற அளவிலேயே ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com