இர்மா புயல் சீற்றத்துக்கு அமெரிக்காவில் 5 பேர் பலி

இர்மா புயல் சீற்றத்துக்கு இதுவரை 5 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரின் கடற்கரையையொட்டிய பகுதியைத் தாக்கும் அலைகள்.
அமெரிக்காவின் மியாமி நகரின் கடற்கரையையொட்டிய பகுதியைத் தாக்கும் அலைகள்.

இர்மா புயல் சீற்றத்துக்கு இதுவரை 5 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் புயல் முற்றிலும் கடந்த பிறகு அனைத்து இடங்களையும் பார்வையிட்ட பின்னர்தான் பலி எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் அளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த நூறாண்டுகளில் உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக "இர்மா' கருதப்படுகிறது. கடந்த வாரம் உருவான அந்தப் புயல் போர்டோ ரிகோ, செயின்ட் மார்ட்டின், பஹாமா தீவுகள், கியூபா உள்ளிட்ட கரீபியன் நாடுகளைத் துவைத்து எடுத்த பின்னர் வலுவிழக்காமல் அமெரிக்க கரையை நோக்கி நகர்ந்தது.
கியூபாவை சனிக்கிழமை தாக்கிய "இர்மா' அதன் வலுவை சற்றே இழந்தது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறினர். ஆனால் அமெரிக்காவின் தென் கிழக்குக் கரையை அது நெருங்கியபோது புயல் ரகம்-4 என்கிற வலுவுள்ள புயலாகவே இருந்தது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தாக்கியது. அது தொடர்ந்து வடக்கே நகர்ந்து மாகாணம் முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாகாணம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடைவிடாத புயல் காற்று வீசி வருகிறது. மிக பலத்த மழையும் பெய்து வருகிறது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு அதன் தீவிரம் குறைந்ததாக வானிலை மையம் அறிவித்தது. புயல் ரகம்-1ஆக அதன் தீவிரம் குறைக்கப்பட்டபோதிலும், காற்று சுமார் 110 கி.மீ. வேகத்தில் வீசியது. பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
ஃபுளோரிடா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன.
மாகாணம் முழுவதும் சனிக்கிழமை முதலே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, ஆபத்தான பகுதிகளில் வசித்த சுமார் 60 லட்சம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டனர். ஃபுளோரிடாவில் உள்ளரங்குகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தாற்காலிக முகாம்களில் சுமார் 1.7 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எச்சரிக்கைகளைப் புறக்கணித்த சுமார் பத்தாயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறாமல் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.
மாகாணத்தின் மேற்குக் கரையில் உள்ள நேப்பிள்ஸ் நகரில் ஒன்றரை மணி நேரத்தில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
புயலும் மழையும் ஓய்ந்த பின்னர்தான் உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த முழு விவரங்களையும் அறிய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "இர்மா' புயலின் தீவிரம் சற்றுக் குறைந்ததாகக் கூறப்பட்டாலும் பலத்த காற்று, மழையுடன் தொடர்ந்து வடக்கே ஜார்ஜியா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் நிலை செவ்வாய்க்கிழமைக்குப் பிறகும் தீவிரமாக இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இர்மா புயலால் பெரும் பாதிப்படைந்த கியூபாவில் 10 பேர் பலியாகினர். முன்னதாக, செயின்ட் மார்ட்டின், போர்ட்டோ ரிகோ உள்ளிட்ட இடங்களில் 25 பேர் புயல், மழைக்கு பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com