இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

அவமதிப்பு வழக்கில் ஆஜராக மறுத்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அவமதிப்பு வழக்கில் ஆஜராக மறுத்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அவரது கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதி திரட்டியதில் முறைகேடு தொடர்பாக அக்பர் எஸ்.பாபர் என்ற மூத்த தலைவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அவர், இம்ரான் கானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனித்து இயங்கி வருகிறார்.
வெளிநாட்டு நிதி தொடர்பான அவரது புகாரை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், கட்சி நிதி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சட்டத்தை மீறித் தேவையற்ற முறையில் தீவிரம் காட்டுவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவரது அவதூறு குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் இம்ரான் கானுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியாக கடந்த ஆக. 23-ஆம் தேதிக்குள் அவர் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அப்போதும் அவர் தேர்தல் ஆணையத்தின் முன்பாக ஆஜராகவில்லை. அவரால் ஆஜராக இயலாது என்ற தகவலையும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவில்லை. இந் நிலையில், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணையின்போதும் இம்ரான் கான் ஆஜராகவில்லை. இது தேர்தல் ஆணையரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இம்ரான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தார் எனவும், அவர் 1 மணி நேரத்துக்கு முன்னர்தான் நாடு திரும்பினார் எனவும் அவரது வழக்குரைஞர் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தார். அதில் தேர்தல் ஆணையர் சமாதானம் அடையவில்லை.
"இம்ரான் கான் சட்டத்தை மதிப்பவரானால், இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களிலேயே தேர்தல் ஆணையத்தின் முன்பாக ஆஜராகியிருப்பார்' என்று கூறிய தேர்தல் ஆணையர், வரும் 25-ஆம் தேதி ஆணையத்தின் முன்பாக இம்ரான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
செப். 25-ஆம் தேதி வரை இம்ரான் கான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், ரூ. 1 லட்சம் பிணைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் தேர்தல் ஆணையர் பிறப்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com