வட கொரிய விவகாரத்தில் அரசியல் தீர்வு காண வேண்டும்

வட கொரியா விவகாரத்தில் அரசியல் தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

வட கொரியா விவகாரத்தில் அரசியல் தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வின் முந்தைய தடைகளை மீறி மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வட கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்டது. இதையடுத்து, அந்நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த திங்கள்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்வது 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வட கொரியாவிலிருந்து ஜவுளி ஏற்றுமதி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலக்கரி, எஃகு தாது, எஃகு பொருள்களை அந்த நாடு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைகள் மூலம் வட கொரியாவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் உலக நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளித்து வரும் அந்த நாட்டின் மீது இந்தக் கடுமையான பொருளாதாரத் தடைகள் மிக அவசியம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியது:
வட கொரியா நிகழ்த்தியுள்ள ஏவுகணை சோதனைகளும், அணு குண்டு சோதனைகளும் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ளது. அப்பகுதியில் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வட கொரியா தொடர்பான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. சர்வதேச நிலையில் வட கொரியா பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதன் நினைவூட்டல்தான் அந்தத் தீர்மானம்.
வட கொரியா தொடர்பான இந்தத் தீர்மானத்தையும் முந்தைய தீர்மானங்களையும் உலக நாடுகள் முழுமையாகப் பின்பற்றுவதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்ய வேண்டும். உலக அமைதியை முன்னிட்டு அனைத்து நாடுகளும் இந்த மிகப் பெரிய பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஓர் ஆபத்தான கட்டத்தில் உள்ளோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதி நிலை திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வட கொரியா விவகாரத்துக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசியல் ரீதியான தீர்வுதான் நிலையானது. ராணுவத் தீர்வை நாம் தேர்ந்தெடுத்தால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பல தலைமுறைகளுக்கு மனித குலம் அனுபவிக்க வேண்டி வரும் என்றார் அவர்.
ஏதேனும் காரணத்தால் வட கொரிய அரசு வீழ்ச்சி அடைந்தால், அங்கிருந்து ஏராளமான அகதிகள் சீனாவுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
இது சீனாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதைவிட முக்கியக் கவலை, சீனாவின் நட்பு நாடாக உள்ள வட கொரியாவில் அரசு வீழ்ச்சி அடைந்த பிறகு வட கொரியாவும் தென் கொரியாவும் இணைய நேர்ந்தால், அது அமெரிக்காவின் நட்பு நாடாகவே இருக்கும். இது சீனாவுக்குப் பின்னடைவாக இருக்கும் என்பதால் வட கொரியா விவகாரத்தில் சீனா சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com