இந்திய-அமெரிக்க உறவுகளை குறுகிய வர்த்தக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்

இந்திய-அமெரிக்க உறவுகளை குறுகிய வர்த்தகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று அமெரிக்க தொழில், வர்த்தகத் துறையினரை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா கேட்டுக் கொண்டார். 

இந்திய-அமெரிக்க உறவுகளை குறுகிய வர்த்தகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று அமெரிக்க தொழில், வர்த்தகத் துறையினரை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா கேட்டுக் கொண்டார். 
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா பேசும்போது, இரு நாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற நிலை குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: இந்திய-அமெரிக்க உறவுகளை குறுகிய வர்த்தகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இந்த உறவுகள், பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும், நீடித்து நிலைத்து வந்துள்ளன. அவை பன்முகத்தன்மை வாய்ந்தவை.
நான் இந்திய வெளியுறவுத் துறை பணி நிமித்தம் கடந்த 1998-இல் முதல் முறையாக அமெரிக்கா வந்தேன். அப்போது இரு நாட்டு உறவுகளில் ஏற்றங்கள் மட்டுமே காணப்பட்டன. இரு நாட்டுத் தலைநகரங்களிலும் மிகப்பெரும் நம்பிக்கையுடன் கூடிய முற்போக்கு ரீதியிலான நிர்வாகங்களை நாம் கண்டுள்ளோம். பாரபட்சமான அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது உறவுகள் நீடித்து வந்துள்ளன.
இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது வர்த்தகப் பற்றாக்குறை நிலைமை மிகவும் மோசமடைந்ததாகத் தெரியவில்லை. சீனாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறையுடன் ஒப்பிட்டால், அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியா-அமெரிக்கா இடையே காணப்படுகிறது. எனவே, இதைச் சரிசெய்ய முயற்சித்து வருகிறோம். 
இரு நாடுகளிடையே பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகள் மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க முடிவதோடு, சமச்சீரான வர்த்தகத்தையும் பராமரிக்க முடியும். அமெரிக்கத் தொழில்நுட்பத்தை அதிக அளவில் சார்ந்திருப்பது, இரு நாடுகளும் பல்வேறு சாதனங்களை இணைந்து உருவாக்குவதற்கான வாய்ப்பு, அவற்றை இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்பு ஆகியவை இருதரப்பு வர்த்தகம் மற்றும் சமச்சீரான வர்த்தகத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com