எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு தொடங்கியது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு தொடங்கியது.
இது குறித்து நேபாள நில அளவைத் துறையின் தலைவர் கணேஷ் பிரசாத் பட்டா கூறியது: எவரெஸ்ட் உயரத்தைப் புதிதாக அளப்பதற்கு நேபாள அளவை நிபுணர்களும் வெளிநாட்டு நிபுணர்களும் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சர்வதேச அளவிலான புதிய அளவை முறைகளையும் கருவிகளையும் குறித்து அவர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ற காலமான ஏப்ரல் மாதத்தில் ஷேர்ப்பாக்கள் குழு அளவைக் கருவிகளுடன் மலை உச்சியை சென்றடையும். அதன் பிறகு மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அளவைக் கருவிகளுடன் எவரெஸ்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும். 
அவற்றிலிருந்து கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் எவரெஸ்ட் உயரம் கணக்கிடப்படும். இந்த அளவிடுதல் நடவடிக்கை நிறைவடைய இரண்டாண்டுகள் ஆகும் என்றார் அவர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்கள் வாழும் பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. சுமார் 9,000 பேர் பலியாகினர். 
மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். எவரெஸ்ட் உச்சிக்கு சற்று கீழே "ஹிலாரி படி' என்று அறியப்பட்ட பாறைப் பகுதி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
இதைத் தொடர்ந்து எவரெஸ்டில் புதிய அளவை மேற்கொள்ளவும் அதன் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டதா என்று அறியவும் நேபாள அரசு முடிவு செய்தது. எவரெஸ்டின் உயரம் 8,848 மீட்டர் என்று இந்தியா 1954-இல் மேற்கொண்ட அளவையிலிருந்து தெரிய வந்தது. அதன் பின்னர் பல முறை எவரெஸ்ட் உயரம் அளக்கப்பட்டாலும் இந்திய அளவையே அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com