ரோஹிங்கயாக்களுக்கு 14,000 புதிய குடியிருப்புகள்

மியான்மரிலிருந்து வந்த அகதிகளைத் தங்க வைப்பதற்காக 14,000 புதிய குடியிருப்புகளை அமைக்கப் போவதாக வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகருக்கு வெளியே உள்ள ரோஹிங்கயாக்களின் தாற்காலிக முகாம்.
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகருக்கு வெளியே உள்ள ரோஹிங்கயாக்களின் தாற்காலிக முகாம்.

மியான்மரிலிருந்து வந்த அகதிகளைத் தங்க வைப்பதற்காக 14,000 புதிய குடியிருப்புகளை அமைக்கப் போவதாக வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.
வன்முறையைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மியான்மரிலிருந்து ரோஹிங்கயாக்கள் மியான்மரிலிருந்து வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் புகலிடம் தேடி வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கெனவே சுமார் 2 லட்சம் அகதிகள் காக்ஸ் பஜார் நகருக்கு வெளியே அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சுமார் மூன்று வார காலத்தில் மட்டுமே 4 லட்சம் அகதிகள் வந்துள்ளனர். அவர்கள் சாலையோரங்களிலும் வெட்டவெளிகளிலும் தங்கியுள்ளனர். மிக அதிக அளவிலான அகதிகள் வருகையை சமாளிக்க முடியாமல் வங்கதேச அரசு தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், புதிதாக வந்த அகதிகளைத் தங்க வைக்க 14,000 குடியிருப்புகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் நிவாரண அமைப்பின் செயலர் ஷா கமால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியது: தற்போதுள்ள முகாம்களில் அகதிகளுக்கு இடம் அளிப்பது என்பது இயலாத காரியம். அந்த முகாம்களுக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பில் புதிய முகாம் அளிக்க அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அங்கு 14,000 குடியிருப்புகளை அமைக்க வேண்டுமென பேரிடர் நிவாரண அமைப்புக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகளை 10 நாட்களில் அமைக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பிலும் 6 குடும்பங்கள் தங்க முடியும். கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் குடியிருப்புகள் அமைக்கப்படும். பொது மருத்துவ வசதியும் அமைக்கப்படும். ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் உதவியுடன் இந்த முகாம்கள் அமைக்கப்படும்.
பெற்றோர், உறவினர்கள் இன்றி தனித்து அகதிகளாக வந்துள்ள சிறுவர்கள் வங்கதேச அரசின் சமூக நலத்துறையின் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது என்று அவர் கூறினார்.
மிக அதிக எண்ணிக்கையிலான ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்துக்குள் வருவது ஐ.நா. அமைப்புகளைத் திகைக்க வைத்துள்ளது. நிவாரணப் பொருள்களை வழங்குவது, மருத்துவ உதவிகள் வழங்குவது போன்றவற்றில் குழப்பம், உதவிப் பொருள்கள் பெறும்போது அகதிகள் இடையே மோதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு ஐ.நா. அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட உதவும் விதமாக, ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க ஐ.நா. சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
மூவர் பலி: காக்ஸ் பஜார் அகதிகள் முகாமில் தனியார் சார்பில் உதவிப் பொருள்கள் வழங்கிய இடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கவனக் குறைவால் உயிரிழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com