வியத்நாம்: புயல் சீற்றத்துக்கு 4 பேர் பலி

வியத்நாமில் வெள்ளிக்கிழமை வீசிய புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

வியத்நாமில் வெள்ளிக்கிழமை வீசிய புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மத்திய வியத்நாமில் வீசிய "டோக்சுரி' புயல் அங்குள்ள மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்படுத்தியது. இதனால், சுமார் 1,23,000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80,000 பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
புயல் சீற்றம் காரணமாக, வீடு, உடைமைகளை இழந்து ஏராளமானோர் தவித்து வருகின்றனர். ஐந்து மாகாணங்களில், மின் இணைப்பு, தொலைத் தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. புயலால் உருக்குலைந்த பகுதிகளில் கட்டட இடிபாடுகள் மலைபோல் குவிந்துள்ளன. துரித கதியில் இவற்றை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 
புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், 8 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய புயல்களில் "டோக்சுரி' யும் ஒன்று என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் புயலால், நிலச்சரிவு,வெள்ளம், பலத்த மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com