போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டால் மகன் உயிரைப் பறிக்க உத்தரவிடுவேன்: பிலிப்பின்ஸ் அதிபர்

போதை மருந்து கடத்தலில் எனது மகன் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால் அவன் உயிரைப் பறிக்க உத்தரவிடுவேன் என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டால் மகன் உயிரைப் பறிக்க உத்தரவிடுவேன்: பிலிப்பின்ஸ் அதிபர்

போதை மருந்து கடத்தலில் எனது மகன் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால் அவன் உயிரைப் பறிக்க உத்தரவிடுவேன் என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பின்ஸ் அதிபரின் மகன் பாவ்லோ டுடேர்தே (42). இவர் சீனாவிலிருந்து போதை மருந்து கடத்தி வரும் கும்பலில் உறுப்பினராக உள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பிலிப்பின்ஸ் நாடாளுமன்றக் குழு விசாரணை மேற்கொண்டது. அந்தக் குழு முன்பாக இந்த மாதம் ஆஜரான பாவ்லோ டுடேர்தே அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில் தலைநகர் மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு ஊழியர்கள் கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே பேசியதாவது:
சமூகத்தையும் நாட்டையும் அழிக்கும் போதை மருத்து கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தேர்தலின்போதே வாக்குறுதி அளித்திருந்தேன். எனது குடும்பத்தினரே போதை மருந்து விவகாரத்தில் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கு மரணம்தான் பரிசாகக் கிடைக்கும் என்று கூறி வந்துள்ளேன். போதை மருந்து வைத்திருந்ததாக என்னுடைய மகன் பாவ்லோ மீதே குற்றம் சாட்டப்பட்டாலும், அவனுடைய உயிரைப் பறிக்க உத்தரவிடுவேன். எனது மகன் உயிரைப் பறிக்கும் காவல் துறையினருக்கு முழுமையாகத் துணை நிற்பேன் என்று முன்பே கூறினேன். தேர்தலுக்கு முன் இதை என் மகனிடமே கூறியிருக்கிறேன் என்று அதிபர் டுடேர்தே உறுதிபடக் கூறினார்.
பிலிப்பின்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுடேர்தே பதவியேற்றதிலிருந்து போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு எதிராக தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரது பதவிக் காலத்தில் இதுவரையில், போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3,800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களுக்கும் போதை மருந்து கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பிலிப்பின்ஸில் சுமார் 30 லட்சம் பேர் போதை மருந்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களின் உயிரைப் பறிப்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று அதிபர் டுடேர்தே கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com