வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளின் மக்கள் அமெரிக்கா வர தடை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட 6 நாடுகளுடன் தற்போது வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட மூன்று நாடுகள்
வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளின் மக்கள் அமெரிக்கா வர தடை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட 6 நாடுகளுடன் தற்போது வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட மூன்று நாடுகள் என 8 நாடுகளின் மக்கள் அமெரிக்காவிற்கு வர தடை பட்டியலை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் முஸ்லீம் நாடுகளின் மீது மட்டும் டிரம்ப் விதித்த தடை, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத ரீதியாக மக்கள் ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

டிரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் முறையிட்டனர். கீழமை நீதிமன்றங்களில் டிரம்ப் உத்தரவுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவை அனுமதித்தது.

வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை பார்க்க அனுமதிக்கலாம் என்றும் இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து தடைபட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. 

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் ஆலோசனைகளின் படி, அமெரிக்க வெள்ளை மாளிகை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதனை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று வெளியிட்டார்.

அதில், பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே எனது முதல் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் நபர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய 3 நாடுகள் அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நாடுகளின் அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தாருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுடன் ஏற்கனவே உள்ள ராணுவ ரீதியிலான பகை சற்றும் குறையாத நிலையில் இந்த தடை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என கூறப்படுகிறது. 

முன்னதாக, அமெரிக்கர்கள் எவ்வித காரணத்திற்காகவும் வடகொரியா செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.

இந்நிலையில் புதிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையும், முஸ்லீம்கள் மீதான அத்துமீறல் என்று அமெரிக்க சிவில் யூனியன் உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com