நவாஸ் ஷெரீஃப் மீது அக்.2-இல் குற்றச்சாட்டுப் பதிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் வரும் அக். 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்ற விசாரணைக்கு வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்.
நீதிமன்ற விசாரணைக்கு வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் வரும் அக். 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.
தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நவாஸ் ஷெரீஃப் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தொண்டைப் புற்று நோய் சிகிச்சை பெற்று உடல் நிலை தேறி வரும் தனது மனைவியைக் காண லண்டன் சென்றதால் முந்தைய விசாரணையின்போது ஆஜராக இயலவில்லை என்று நீதிபதியிடம் அவர் தெரிவித்தார். தனது மனைவியைக் காண மீண்டும் லண்டன் செல்லவிருப்பதால் விசாரணையில் தொடர்ந்து ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நவாஸ் ஷெரீஃப் கூறியதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவர் நீதிமன்றத்தைவிட்டு வெளியேற அனுமதி அளித்தார்.
பத்து நிமிட இடைவேளைக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது நவாஸ் ஷெரீஃப் சார்பில் அவரது வழக்குரைஞர் கவாஜா ஹாரிஸ் மட்டும் ஆஜரானார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸ் மகன்கள் ஹுசேன், ஹசன், மகள் மரியம், மருமகன் சஃப்தர் ஆகியோர் ஏன் ஆஜராகவில்லை என்று நீதிபதி கேட்டார். 
நவாஸ் மனைவியைக் காண அவர்கள் லண்டன் சென்றிருப்பதாக கவாஜா ஹாரிஸ் தெரிவித்தார். 
வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியும் நவாஸ் ஷெரீஃப் மட்டுமே வந்துள்ளார் என்று தெரிவித்த நீதிபதி, மீதமுள்ளவர்கள் வராததற்குக் கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக கைது உத்தரவைப் பிறப்பித்தார். வரும் அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனிடையே, அனைவரும் ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கவாஜா ஹாரிஸ் கூறினார். குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் குற்றச்சாட்டு பதிவு செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.
அந்த வாதத்தை அரசு வழக்குரைஞர் நிராகரித்தார். நீதிபதி உத்தரவுப்படி நவாஸ் ஷெரீஃப் ஆஜரான நிலையில், பிறரைத் தலைமறைவானவர்களாக அறிவித்து விசாரணையைத் தொடர வேண்டும் என்று கூறினார்.
அவரது வாதத்தைப் பதிவு செய்த நீதிபதி அடுத்த விசாரணை அக். 2-இல் நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வழக்குரைஞர்கள், மத்திய மாகாண அமைச்சர்கள் என நூறுக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். அதைத் தவிர, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.
முன்னதாக, நவாஸ் ஷெரீஃப் நீதிமன்றத்துக்கு வரும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இரு புறமும் திரண்டிருந்தனர். அவர் பயணம் செய்த வாகனத்துடன் சுமார் 35 வாகனங்கள் நீதிமன்றத்துக்கு வந்தன. அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய, மாகாண அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அதில் பயணம் செய்தனர்.
பனாமா ஆவண கசிவைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டது. அது குறித்த வழக்கில் அவரைத் தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியையும் எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 3 வழக்குகளை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கத்தோடு சுமத்தப்பட்டவை என்றும் தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் நவாஸ் ஷெரீஃப் கூறி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com