'நேபாள குமாரி'- காத்மாண்டு கடவுளாக 3 வயது சிறுமி தேர்வு!

'நேபாள குமாரி'- காத்மாண்டு கடவுளாக 3 வயது சிறுமி தேர்வு!

நேபாளத்தின் பாரம்பரிய வழக்கத்தின் அடிப்படையில் அடுத்த கடவுளாக 3 வயது சிறுமி வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அவ்வகையில் ஒரு சிறுமி தனது 3-ஆவது வயது முதல் பூப்படைதல் வரை கடவுளாக இருப்பார்.

பின்னர் வேறொரு 3 வயது சிறுமி தேர்வு செய்யப்படுவார். நேபாளத்தின் குமாரி என்றழைக்கப்படும் இந்தச் சிறுமியை தேர்வு செய்வதில் பலதரப்பட்ட சோதனைகள் உள்ளன.

குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதை சோதனை செய்வர். அனைத்து தேர்விலும் வெற்றிபெறும் சிறுமிக்கு முன்பாக இறுதியான தேர்வாக ஒரு எருமை பலியிடப்படும்.

அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த நேபாள குமாரியாக தேர்வு செய்யப்படுகிறார். இவ்வாறு தேர்வாகும் சிறுமி அங்குள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்படுவார்.

ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார். மேலும், அவரது கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்து சுமந்து செல்லப்படுவார்.

இந்த நடைமுறை பௌத்தம் மற்றும் ஹிந்து மதங்களின் கூட்டு அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. ஹிந்துக் கடவுளான தலேஜூவின் உருவமாக இந்த குமாரி பார்க்கப்படுகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டில் மேட்னி ஷக்யா என்ற சிறுமி நேபாளத்தின் குமாரியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் பூப்படைந்ததால் இச்சடங்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இந்நிலையில், நேபாளத்தின் அடுத்த குமாரி கடவுளாக 3 வயது திரிஷ்னா ஷக்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 சிறுமிகளுக்கு இடையே நடந்த இப்போட்டியில் கடைசி வரை அனைத்து சடங்குகளிலும் சரியாக இருந்ததால் இவர் தேர்வாகியுள்ளார்.

எனவே இவர் காத்மாண்டுவின் தர்பார் சதுக்கதில் உள்ள அரண்மனையில் வசிப்பார். மேலும் நேபாளத்தின் அடுத்த கடவுளாக போற்றப்படுவார்.

கடந்த 2008-ம் ஆண்டுடன் அங்கிருந்த ஹிந்து சாம்ராஜ்ஜிய அரசவை முறை கலைக்கப்பட்டது. இருப்பினும் இச்சடங்குகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

இந்த குமாரி நடைமுறை காரணமாக அச்சிறுமிகளின் இளமைப் பருவம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூப்படைந்த பின் விடுவிக்கப்பட்டு வெளி உலகில் வரும் தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக அதுபோன்று தேர்வான குமாரிகள் தெரிவித்தனர்.

எனவே, இதுபோன்று குமாரிகளாக தேர்வாகும் சிறுமிகளுக்கு கல்வி அவசியம் என 2008-ல் நேபாள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்காரணமாக அந்த குமாரிகள் படிக்கலாம். மேலும் அரண்மனையில் இருந்தே தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் சமீபகாலமாக இதுபோன்று தங்கள் மகள்களை குமாரிகளாக்க பெற்றொர்களிடத்தில் ஆர்வம் குறைந்து வருவதாக அங்குள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com