ஆப்கனில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் பயணம்

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸும், நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டெல்டென்பெர்கும் ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை திடீர்ப் பயணம் மேற்கொண்டனர்.
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி (நடுவே), அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ்
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி (நடுவே), அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ்

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸும், நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டெல்டென்பெர்கும் ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை திடீர்ப் பயணம் மேற்கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் காலவரையின்றி அமெரிக்க வீரர்களை நிறுத்துவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அந்த நாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து செல்லும் முதல் உயர்நிலைத் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை கடந்த 2014-ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதற்குப் பிறகு, தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு ஆப்கன் படையினர் திணறி வரும் சூழலில், ஜேம்ஸ் மேட்சிஸும், ஜென்ஸ் ஸ்டெல்டென்பெர்கும் முன்னறிவிப்பின்றி அந்த நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ஆப்கனுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக ராணுவ உதவிகளை அளித்து வரும் நிலையிலும், கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி அந்த நாட்டின் 407 மாவட்டங்களில் 60 சதவீதம் மட்டுமே அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இது, ஆப்கன் விவகாரத்தில் எதிரிகளுக்கு எதிராக மேலும் முன்னேற முடியாத நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதிகள் கூறி வருகின்றனர்.
அடுத்த மாதத்துடன், ஆப்கன் போரில் அமெரிக்கா இறங்கி 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. அமெரிக்காவின் வரலாற்றில் மீக நீண்டகாலப் போரான இதில், முன்னற்றம் காண முடியாமல் சிக்கியுள்ள தருணத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சரும், நேட்டோ தலைவரும் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
ஏவுகணை குண்டுகள் வீச்சு
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் காபூலில் வந்திறங்கிய சிறிது நேரத்தில், அந்த நகரின் சர்வதேச விமான நிலையம் அருகே 6 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தின் ராணுவத்தினருக்கான பகுதியில் அந்த குண்டுகள் விழுந்து வெடித்தாலும், இதில் யாரும் காயமடையவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com