ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க ஆதரவு தெரிவிக்கக்கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க ஆதரவு தெரிவிக்கக்கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மிகவும் செல்வாக்கு பெற்ற எம்.பி.க்களாக அறியப்படும் அமி பெரா, பிராங்க் பல்லோன் ஆகியோர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். அந்த தீர்மானத்தில், உலகின் அபிவிருத்திக்கு இந்தியா அதிகளவு பங்களிப்பு அளிப்பதை அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து அமி பெரா கூறியதாவது:
உலகின் பழைமையான ஜனநாயக நாடாகவும், மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் திகழும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பொதுவான நலன்கள் உள்ளன. பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவின் பிராந்தியக் கூட்டாளி என்ற முறையில் இந்தியா முக்கிய பங்களிப்பை அளித்து வருவதுடன், தெற்காசிய ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகவும் திகழ்கிறது. 60 ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. உலக அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதை அங்கீகரிக்க வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்படுவது, உலகம் முழுமைக்கும் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும் என்று அமி பெரா கூறினார்.
பிராங்க் பல்லோன் கூறுகையில், ' ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவும் நிரந்தர உறுப்பினராக வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கும், உலகத்துக்கும் இதை அமெரிக்க நாடாளுமன்றம் தெளிவாக தெரிவிக்கும்' என்றார்.
2ஆம் உலகப் போரின் முடிவில் கடந்த 1945ஆம் ஆண்டு ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. அதன் பாதுகாப்புக் கவுன்சிலில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. அதேநேரத்தில், ஐ.நா. சபை உருவாக்கப்பட்டபோது, அதில் 50 நாடுகளே உறுப்பு நாடுகளாக இருந்தன. 
ஆனால், அந்த நாடுகளின் எண்ணிக்கை தற்போது 200ஐ நெருங்கி விட்டது. ஆதலால், உலகில் தற்போதைய மாறியுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com