குல்பூஷண் ஜாதவை ஆப்கனுக்கு அனுப்ப பாகிஸ்தான் பரிசீலனை

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, ஆப்கானிஸ்தான் சிறைக்கு அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக,

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, ஆப்கானிஸ்தான் சிறைக்கு அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறினார்.
நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 150 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறார்கள் ஆவார்கள். இந்தத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி, ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பயங்கரவாதியையும், குல்பூஷண் ஜாதவையும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ளலாமா? என்று ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் கூறினார். இதுதொடர்பாக, பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் நிகழும் மோதல்களாலும், நிலையற்ற தன்மையினாலும் பாகிஸ்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றாவிட்டால், பாகிஸ்தான் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
ஆப்கானிஸ்தானின் அமைதிக்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும் பாகிஸ்தானைவிட வேறு எந்த நாடும் அக்கறை கொண்டிருக்கவில்லை. பாகிஸ்தானின் பிரச்னைகளுக்கு ராணுவத்தால் தீர்வு காண முடியாது என்றார் அவர்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், அந்நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும், குல்பூஷண் ஜாதவ், பலூசிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது. அதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை இந்திய அரசு நாடியது.
இந்திய அரசின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அதன்டி, அவரது மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com