பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: பாக். நடவடிக்கை

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வரும் ஜமா உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ்
பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: பாக். நடவடிக்கை

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வரும் ஜமா உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் வீட்டுக்காவலை மேலும் ஒரு மாதத்துக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ' ஹஃபீஸ் சயீது, அவரது கூட்டாளிகள் அப்துல்லா உபைத், மாலிக் ஜாபர் இக்பால், அப்துல் ரகுமான் அபித், காஸி காசிப் ஹுசேன் ஆகிய 5 பேரின் வீட்டுக் காவல், செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
5 பேரின் விடுதலையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுமைக்கும் ஜமா உத் தவா, பலா இ இன்சானியத் ஆகிய அமைப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தன. ஹஃபீஸ் சயீது தலைமையில் போராட்டத்தை நடத்த அந்த அமைப்புகள் தீர்மானித்திருந்தன. ஹஃபீஸ் சயீதுவை கதாநாயகனாக சித்திரிக்கவும், அவரது நடவடிக்கைகளை கௌரவிக்கவும் முடிவு செய்திருந்தன.
சயீது உள்ளிட்டோரின் விடுதலையைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜமா உத் தவா மூத்த தலைவர் அப்துல் ரகுமான் மேக்கி ஏற்பாடுகள் செய்திருந்தார். போக்குவரத்துக்காக ஏராளமான வாகனங்களையும், தங்களது பலத்தை நிரூபிக்க ஆயுதங்களையும் அவர்கள் திரட்டியிருந்தனர். அந்த ஆயுதங்களை, காவல்துறையினருக்கு எதிராக தேவைப்பட்டால் பயன்படுத்தவும் முடிவு செய்திருந்தனர். இந்த நோக்கத்துக்காக நிதியும் திரட்டப்பட்டிருந்தது.
ஹஃபீஸ் சயீது சுதந்திரமாக இருப்பது பாகிஸ்தானின் அமைதிக்கு ஆபத்து. ஆதலால் பாகிஸ்தானின் அமைதி, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சயீது உள்ளிட்டோரின் வீட்டுக் காவலை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதேபோல், லாகூர் மாவட்ட புலனாய்வுத் துறைக் குழுவும், சயீது விடுதலையைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு நிலைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் உள்துறைச் செயலர் ஆர். ஆஸம் சுலைமான் கூறியபோது, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹஃபீஸ் சயீதுவின் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய மனு: இதனிடையே, தனது வீட்டுக் காவல் மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஹஃபீஸ் சயீது புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிப்படையாக நடத்தக்கூடாது என்று உள்துறை வேண்டுகோள் விடுத்தது. இதை நீதிபதி நிராகரித்து விட்டார். ஹஃபீஸ் சயீதின் மனு மீது வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்தார். 
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தத் தாக்குதலை ஜமா உத் தவா-வின் கிளை அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஹஃபீஸ் சயீதுவின் தலைக்கு 10 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வெகுமதியாக அறிவித்தது.
இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ், ஹஃபீஸ் சயீது உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் மாகாண அரசு கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. அந்த வீட்டுக் காவலை நீட்டித்து, கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி உத்தரவை பஞ்சாப் உள்துறை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, ஹஃபீஸ் சயீதுவின் வீட்டுக் காவல் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com