ஆப்பிரிக்க கண்டத்துக்கு வந்த ஆபத்து! பூமி இரண்டாகப் பிளந்து கொண்டிருக்கும் அபாயம்! (விடியோ)

இயற்கையை மனிதன் சுரண்டி எத்தனை காலத்துக்குத் தான் வாழ்ந்துவிட முடியும். நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதும்,
ஆப்பிரிக்க கண்டத்துக்கு வந்த ஆபத்து! பூமி இரண்டாகப் பிளந்து கொண்டிருக்கும் அபாயம்! (விடியோ)

இயற்கையை மனிதன் சுரண்டி எத்தனை காலத்துக்குத் தான் வாழ்ந்துவிட முடியும். நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதும், ரசாயனங்களை நச்சுப்பொருட்களை பூமியில் விதைப்பதில் தொடங்கி, மலையை உடைப்பதும், மரங்களை அழிப்பதுமாக மனிதர்களின் மூர்க்கத்தனங்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது இயற்கை. அதன் விளைவே சுனாமி, புயல்,  கடும் மழை, எரிமலை குழம்பு, பூமி வெடிப்பு, காட்டுத் தீ உள்ளிட்ட பல இயற்கை பேரிடர்கள் எனலாம்.

கற்காலத்தில் மனிதன் தனக்குப் புரியாத இயற்கையின் நிகழ்வுகளை இறைவன் என பெயரிட்டு சரண் அடைந்து இயற்கைக்கு கட்டுப்பட்டு அதில் ஒரு அங்கமாக வாழ்ந்து வந்தான். அந்த தொல்குடியினர் என்றுமே இயற்கைக்கு எதிராக வாழ நினைத்ததில்லை. ஆனால் நாகரிகம் வளர வளர, இயற்கையை சிதைக்கும் கொடூர மனங்கள் கொண்டவர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து அழிவின் பாதையிலும் அவர்கள் கால் வைத்துவிட்டனர் எனலாம். இன்று தொழில்நுட்ப வசதிகளுடன் உலகம் மேன்மேலும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தாலும், உயிர் வாழ்வதற்கு இயற்கையைத் தான் நாம் நம்ப வேண்டும். காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் துணை இல்லாவிட்டால் இப்பூமியில் ஓருயிரும் ஒரு நொடி கூட உயிர்த்திருக்க முடியாது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத மனிதன் இயற்கையை சீண்டி விளையாடத் தொடங்குகையில் தான் விபரீதங்கள் நேர்கிறது. அத்தகைய ஆபத்துக்கள் திடீரென ஒரு நாள் பூதாகரமாக வெடித்துவிடுகிறது.

உலகின் இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்ரிகாவில் அத்தகைய ஒரு பேரழிவுக்கான ஒரு சிறிய நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஆண்டில் தொடங்கிய அந்தப் பிரச்னை மெள்ள அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. அது என்ன பிரச்னை?

உலகின் இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா. உலகப் பரப்பில் 20 சதவிகிதப் பகுதிகள் உள்ள இக்கண்டத்தின் மொத்த பரப்பளவு 3,03,23,000 சதுர கிலோ மீட்டர் ஆகும். இக்கண்டத்தின் தெற்கே பீடபூமியும், வடக்கே பாலைவனமும், மையத்தில் காடுகளும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்காவிலுள்ள முக்கிய நாடுகள் கென்யா, எகிப்து, அல்ஜீரியா, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, அங்கோலா, காங்கோ, லிபியா, எத்தியோப்பியா, உகாண்டா, மொராக்கோ ஆகியவை. தற்போது கென்யாவின் தென்மேற்குப் பகுதியான கென்யா பிளவு பள்ளத்தாக்கு பகுதியில் மார்ச் மாதம் பெய்த கடும் மழைக்குப் பின் அப்பகுதியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அதில் குறிப்பிடக் கூடிய ஒன்று தான் நிலத்தில் பாளம் பாளமாக மிகப் பெரிய பிளவுகள் திடீரென ஏற்படத் தொடங்கியது. தினமும் சிறுகச் சிறுக அந்தப் பிளவு அதிகரித்து வருவதால் இது அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது. 3,000 கீலோமீட்டருக்கு ஏற்பட்டுள்ள இப்பிளவு 50 அடி ஆழமும், 20 அடிக்கும் அதிகமான அகலமும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடாவில் இருந்து ஜிம்பாப்வே வரை 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பிளவு தொடர்கிறது. இது மேலும் அதிகரித்தால் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாகப் பிரிவதற்கான அபாயம் உண்டு என்றனர் புவியியல் வல்லுநர்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தின் கீழிருக்கும் நிலையற்ற டெக்டானிக் தட்டுக்கள் (seismic tremors and tectonic shifts) தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் இது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கென்யாவில் உள்ள மய் மஹ்யு நகரிலுள்ள ரிஃப்ட் எனும் மலைக்குன்றின் அருகே (Mai Mahiu town in the Rift Valley) உள்ள  நெடுஞ்சாலைக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து ஆபத்தான நிலைக்கு உள்ளாகி, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும் இப்பகுதியிலுள்ள வீடுகளிலும் சிறு சிறு கீறல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது நிலமையின் விபரீதத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இது பிளவாக மாறுவதற்குள் அப்பகுதி மக்களை வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

பூமி இரண்டாகப் பிளந்து சீதா தேவி அதனுள் புகுந்து மறைந்தாள் என்பது எல்லாம் புனைவு இல்லை என இதுபோன்ற ஒரு நிகழ்வைப் பார்க்கையில் நினைக்கத் தோன்றுகிறது. நமது இதிகாசங்கள் உண்மையின் ஏதோ ஒரு காட்சி என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். புனைவோ நிஜமோ புராணமோ இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் மனிதர்கள் ஏதுமில்லாதவர்கள். உலகம் அழியும் என்று புவியியல் ஆய்வாளர்களும் ஜோதிடர்களும் கூறு வருவதன் அறிகுறிகளுக்கு இதுதான் நிகழும் சாட்சி. கை கூப்பி இயற்கையை தொழுது மீண்டுமொரு தொல்குடியின் நீட்சியாக, நல்லுயிர்களாக நாம் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் உலகின் மொத்த உயிர்களும் சீதா தேவியின் சந்ததியினராகிவிட வேண்டியதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com