விஷ வாயுத் தாக்குதல்: டூமா நகருக்குள் சர்வதேச ஆய்வுக் குழுவுக்கு அனுமதி மறுப்பு: பிரிட்டன் குற்றச்சாட்டு

சிரியாவின் டூமா நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசுப் படைகள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் விஷ வாயுத் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு அமைப்புக்கு
டூமா நகரில் குண்டு வீச்சால் சேதமடைந்த கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் பெண்கள். நாள்: திங்கள்கிழமை.
டூமா நகரில் குண்டு வீச்சால் சேதமடைந்த கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் பெண்கள். நாள்: திங்கள்கிழமை.

சிரியாவின் டூமா நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசுப் படைகள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் விஷ வாயுத் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு அமைப்புக்கு (ஓபிசிடபிள்யூ) சிரியாவும், ரஷியாவும் அனுமதி மறுப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
ஓபிசிடபிள்யூ அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் பிரிட்டன் தூதகரம் இந்தக் குற்றச்சாட்டை திங்கள்கிழமை சுமத்தியது.
விஷ வாயுத் தாக்குதல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, ஓபிசிடபிள்யூ நிபுணர் குழு சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு சனிக்கிழமை சென்றது.
எனினும், தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் டூமா நகருக்குள் நுழைய அந்த குழுவினருக்கு சிரியாவும், ரஷியாவும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
விஷ வாயுத் தாக்குதல் குறித்து முழு உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஓபிசிடபிள்யூ குழுவினர் தங்குதடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழுவைச் சேர்ந்த பிரிட்டன் பிரதிநிதிகள் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அப்போது முதல் இப்பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடமிருந்து அந்தப் பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, ஐ.நா. மற்றும் ரஷியாவின் அமைதி முயற்சியில், கிழக்கு கெளட்டா பகுதியிலிருந்து கிளர்ச்சிப் படையினர் படிப்படியாக வெளியேறினர்.
எனினும், அந்தப் பகுதியின் முக்கிய நகரமான டூமாவிலிருந்து மட்டும் சில கிளர்ச்சிக் குழுக்கள் வெளியேற மறுத்தன. 
இதையடுத்து, பல நாள் அமைதிக்குப் பிறகு அந்தப் பகுதியில் சிரியா படையினர் மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தினர். 
இந்தச் சூழலில், டூமா நகரில் சிரியா படையினர் கடந்த 7-ஆம் தேதி விஷ வாயுத் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்ததாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதனை ரஷியாவும், சிரியாவும் திட்டவட்டமாக மறுத்து வந்தாலும், அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா ராணுவ நிலைகள் மீது அமெரிக்க-பிரிட்டன்-பிரான்ஸ் கூட்டுப் படை கடந்த சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.
விஷ வாயுத் தாக்குதல் நடத்தியது உண்மைதானா? என்பதைக் கண்டறிவதற்காக ஓபிசிடபிள்யூ நிபுணர் குழு சிரியா வருவதற்கு முன்னரே அவசர அவசரமாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது குறித்து ரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவித்தன.
இந்தச் சூழலில், அந்தக் குழுவினருக்கு டூமா நகருக்குள் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரஷியா திட்டவட்ட மறுப்பு


டூமா நகருக்குள் ஓபிசிடபிள்யூ நிபுணர் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ரஷியாவும், சிரியாவும் ரசாயன ஆயுதக் கண்காணிப்பு நிபுணர்களை டூமா நகருக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு, அடிப்படை முகாந்திரமற்றது.
ஓபிசிடபிள்யூ நிபுணர் குழு குழுவினர் ஒருதலைப்பட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்பதே ரஷியாவின் நிலைப்பாடாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com