புதிய அதிபர் மிகயேல் டியேஸ்-கனேலுடன், ஓய்வு பெறும் ரவுல் காஸ்ட்ரோ.
புதிய அதிபர் மிகயேல் டியேஸ்-கனேலுடன், ஓய்வு பெறும் ரவுல் காஸ்ட்ரோ.

ஓய்வு பெற்றார் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ: புதிய அதிபர் மிகயேல் டியேஸ்-கனேல்

கியூபா அதிபர் பதவியிலிருந்து ரவுல் காஸ்ட்ரோ வியாழக்கிழமை ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, துணை அதிபர் மிகயேல் டியேஸ்-கனேல் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கியூபா அதிபர் பதவியிலிருந்து ரவுல் காஸ்ட்ரோ வியாழக்கிழமை ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, துணை அதிபர் மிகயேல் டியேஸ்-கனேல் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளாக நீடித்து வந்த கேஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கியூபாவில் கம்யூனிஸ்ட் புரட்சியை ஏற்படுத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.

இந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக பொறுப்பிலிருந்து விலகிய ஃபிடல், கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து தனது சகோதரரும், புரட்சியின்போது உடன் போராடியவருமான ரவுல் காஸ்ட்ரோவை அந்தப் பதவிக்கு அமர்த்தினார்.

அதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செலுத்தி வந்த ரவுல் காஸ்ட்ரோ (86), மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று அறிவித்தார்.

அதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் துணை அதிபர் மிகயேல் டியேஸ்-கனேல் (57), 85.6 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

இந்தச் சூழலில், அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றக் கூட்டம், புதன்கிழமை கூடியது.

அந்தக் கூட்டத்தில், அடுத்த அதிபர் பதவிக்காக மிகயேல் டியேஸ்-கனேலின் பெயரை ரவுல் காஸ்ட்ரோ முன்மொழிந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் டியெஸ்-கனேல் கியூபாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளாக நீடித்து வந்த கேஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனினும், கியூபாவின் சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ரவுல் காஸ்ட்ரோ தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, கடந்த 1961-ஆம் ஆண்டில் படையெடுத்து வந்த 1,400 அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் முறியடிக்கப்பட்ட தினத்தையொட்டி, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com