பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் தேர்வு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கானை (65) அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்தது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் தேர்வு


பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கானை (65) அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்தது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்ரானுக்கு எதிராக பிஎம்எல்-என், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட 11 கட்சிகள் அமைத்த மகா கூட்டணியில் கடைசி நேரத்தில் பிளவு ஏற்பட்டது.
அதன் காரணமாக, பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை 54 உறுப்பினர்களைக் கொண்ட பிபிபி கட்சி புறக்கணித்தது.
இதையடுத்து, இம்ரான் தேர்வு ஏற்கெனவே உறுதியாகிவிட்ட நிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
இதில், இம்ரான் கானுக்கு ஆதரவாக 176 எம்.பி.க்கள் வாக்களித்தனர்; அவரை எதிர்த்து பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷாபாஸ் நவாஸுக்கு ஆதரவாக 96 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர்.
அதையடுத்து, இந்த வாக்கெடுப்பில் இம்ரான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், எனவே இந்தத் தேர்வை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிஎம்எல்-என் கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிபிபி கட்சியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளுக்குச் சென்று, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு பிஎம்எல்-எல் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டனர்.
அந்தக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபே, பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோவிடம் இதுகுறித்து பேசினார்.
எனினும், வாக்கெடுப்பைப் புறக்கணிக்கும் முடிவில் பிபிபி கட்சியினர் உறுதியாக இருந்தனர்.
இந்த வாக்கெடுப்பில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 64 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் கைப்பற்றின.
இந்தச் சூழலில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், நியமன எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் இறங்கினார். அவரது கட்சிக்கு பெண்கள் உறுப்பினருக்கான 28 இடங்களும், சிறுபான்மையினருக்கான 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், 9 சுயேச்சை உறுப்பினர்களும் இம்ரான் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, 7 எம்.பி.க்களைக் கொண்ட முத்தாஹிடா குவாமி இயக்கம், 5 இடங்களைக் கொண்ட அவாமி கட்சி, 4 உறுப்பினர்களைக் கொண்ட பலூசிஸ்தான் தேசியக் கட்சி, 3 எம்.பி.க்களைக் கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக், 3 இடங்களைக் கொண்ட ஜனநாயக மகாக் கூட்டணி, தலா ஒரு எம்.பி.க்களைக் கொண்ட அவாமி முஸ்லிம் லீக், ஜமோரி வதன் கட்சி ஆகியவை இம்ரானை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் இம்ரான் கட்சியின் பலம் 182-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இம்ரானுக்கு எதிராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்என்-எல்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்தார்.
அவருக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. எனினும், பிரதமர் பதவி வேட்பாளர் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பிபிபி விடுத்த கோரிக்கையை பிடிஐ ஏற்கவில்லை. இதன் காரணமாக, இம்ரானுக்கு எதிரான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், 176 எம்.பி.க்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பி.க்களின் ஆதரவே தேவை என்ற நிலையில் அவருக்கு 4 வாக்குகள் கூடுதலாகவே கிடைத்துள்ளன.
பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பதவியேற்பு
பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை (ஆக. 18) பதவியேற்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, தனது பதவியேற்பு விழா வரும் 11-ஆம் தேதி நடைபெறும் என்று இம்ரான் தெரிவித்திருந்தார்.
எனினும், பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்று இடைக்கால அரசின் பிரதமர் நாஸிருல் முல்க் விரும்புவதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, இம்ரான் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், அடுத்த பிரதமராக அவர் நாடாளுமன்றத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்துள்ளதைத் தொடர்ந்து, பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இம்ரானின் அழைப்பின் பேரில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் சென்றுள்ளார்.

இம்ரான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடும் அவரது ஆதரவாளர்கள்.
இம்ரான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடும் அவரது ஆதரவாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com