காலிஸ்தான் போராட்டத்தை ஆதரிக்கவில்லை: பிரிட்டன் அரசு விளக்கம்

லண்டனில் சீக்கியர்களின் போராட்டத்துக்கு அனுமதி அளித்தாலும், அவர்களின் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது.

லண்டனில் சீக்கியர்களின் போராட்டத்துக்கு அனுமதி அளித்தாலும், அவர்களின் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது.
லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் சீக்கியர்களின் அமைப்பு (சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்) சார்பில் கடந்த 12-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. சீக்கியர்களுக்கு தனி நாடு வழங்குவது தொடர்பாக, 2020-ஆம் ஆண்டில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டம் நடைபெற்ற தகவல் இந்திய அரசின் கவனத்துக்கு வந்தவுடன், பிரிட்டன் அரசுக்கு இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. வன்முறை, வெறுப்புணர்வு ஆகியவற்றை தூண்டும் போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியிருந்தது.
ஆனால், சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய அரசுக்கு பிரிட்டன் வெளியறவுத் துறை அமைச்சகம் கடந்த 17-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
சீக்கியர்கள் போராட்டம் நடத்துவதற்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்ததால், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவோ அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதாகவோ கருதிவிட கூடாது. சீக்கியர்கள் விடுத்துள்ள கோரிக்கை, இந்திய அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கானது என்பதில் பிரிட்டன் தெளிவாக உள்ளது.
பிரிட்டனில் பன்னெடுங்காலமாக, மக்கள் ஒன்று கூடுவதற்கும், தங்களது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 1984-ஆம் ஆண்டில் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்பட பல்வேறு தருணங்களில் சீக்கியர்கள் தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு பிரிட்டன் அரசு மதிப்பளிக்கிறது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் தங்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்று சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com