தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி லண்டனில் கைது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான ஜபீர் சித்திக் என்கிற ஜபீர் மோத்தி (51) பிரிட்டனின் லண்டன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான ஜபீர் சித்திக் என்கிற ஜபீர் மோத்தி (51) பிரிட்டனின் லண்டன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்நாட்டு போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
விசாரணையில் அவர், தாவூத் இப்ராஹிமுக்கும், அவரது மனைவிக்கும் வலது கரமாக செயல்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் தாவூத் குடும்பத்தினர் சட்டவிரோத முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டவர் ஜபீர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் நாட்டின் 10 ஆண்டு கால நுழைவு விசா பெற்று அவர் அங்கு தங்கியிருந்ததாகத் தெரிகிறது. அவரது சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டதன் விளைவாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைதான ஜபீர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவராவார். அவர் தாவூத்தின் நிதி மேலாளராகச் செயல்பட்டு வந்ததாகத் தெரிவித்த லண்டன் பெருநகர போலீஸாரின் செய்தித் தொடர்பாளர், தற்போதைக்கு இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களை வெளிப்படையாக விவரிக்க இயலாது என கூறியுள்ளார்.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றைய நிலவரப்படி சுமார் 82 கோடி மதிப்புடைய சொத்துகள் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்துக்கான காரணமான முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராஹிம், அப்போது துபை தப்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகு பாகிஸ்தான் சென்ற அவரை, அந்நாட்டு அரசு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பிரிட்டன் அரசால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட சில இடங்கள் மற்றும் தனிநபர்களின் புதிய பட்டியல் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், பாகிஸ்தானில் தாவூத் இருப்பதாகக் கருதப்படும் மூன்று வசிப்பிடங்களும் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com