அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் உடனடியாக அமலுக்கு வரும்

வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த அம்சங்களை
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் உடனடியாக அமலுக்கு வரும்


வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த அம்சங்களை உடனடியாக அமல்படுத்தப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
மேலும், தற்காலிக ஒப்பந்தம் அமலில் இருக்கும் 90 நாள்களுக்குள், இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர பொருளாதார உடன்பாடு ஏற்படும் எனவும் சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீன நிதியமைச்சக செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் கூறியதாவது:
சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே ஆர்ஜென்டீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்தவிருக்கிறோம்.
வேளாண்மை, எரிசக்தி, வாகனங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பொருள்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தாராள சந்தை, மற்றும் ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையிலான சமநிலை ஆகிய விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
தற்போது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள தாற்காலிக சலுகை காலமான 90 நாள்கள் முடிவடைவதற்குள், இந்த விவகாரங்களில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டுவோம் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வந்தார்.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வந்தது.
இது, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், அத்தகைய பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டினிடையே கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பதை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
மேலும், வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.
அமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருள்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர்ப் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com