பாகிஸ்தானுக்கு எதிரான அணுகுமுறையை கொண்டுள்ளது பாஜக: இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அணுகுமுறையை பாஜக கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான அணுகுமுறையை கொண்டுள்ளது பாஜக: இம்ரான் கான் குற்றச்சாட்டு


பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அணுகுமுறையை பாஜக கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அணுகுமுறையை இந்தியாவை ஆளும் பாஜக கொண்டுள்ளது. இந்தியாவுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த நான் எடுத்த அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
2019-ஆம் ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்றார்.
2008-ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
இந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது உள்பட குற்றவாளிகள் பலரும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். 
இது குறித்த கேள்விக்கு, மும்பை தாக்குதல் குறித்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளேன். அந்த சம்பவம் பயங்கரவாத செயல் என்பதால் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைத் தண்டிப்பதில் பாகிஸ்தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று இம்ரான் கான் கூறினார். 
மேலும், கர்தார்பூர் வழித்தடம் குறித்த கேள்விக்கு, சீக்கிய பக்தர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள சாஹிப் குருத்வாரா புனிதத்தலத்துக்கு வரும் வகையில் சாலை அமைக்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இரு நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டம் நடத்தவும் தயார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெறாது. எல்லை தாண்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறி இம்ரான்கானின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com