கறுப்பினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தாரா காந்தி?: பல்கலை வளாகத்தில் சிலை அகற்றப்பட்டதால் சர்ச்சை 

கறுப்பினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கானா நாட்டு பல்கலை வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தி சிலை நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 
கறுப்பினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தாரா காந்தி?: பல்கலை வளாகத்தில் சிலை அகற்றப்பட்டதால் சர்ச்சை 

அக்ரா (கானா): கறுப்பினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கானா நாட்டு பல்கலை வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தி சிலை நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த முக்கியத் தலைவர் 'மகாத்மா' காந்தி. 20 ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் போற்றப்பட்ட தலைவராக விளங்கியவர். 

அவர் தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடினார். ஆனாலும் அந்த சமயத்தில் கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்த போராட்டங்களும் நடைபெற்றது.

அங்குள்ள கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது,  இனவெறி மிக்க வார்த்தையை (கபீர்ஸ்) பயன்படுத்தினார் என்றும், அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை விட மேலானவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்  என சர்சைகள் நிலவி வந்தது.  

2016-ல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது , ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக  வளாகத்தில் காந்தி சிலை ஒன்றை  திறந்து வைத்து இருந்தார்.அந்த சமயம் முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் கறுப்பினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கானா  பல்கலை வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தி சிலை நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 
 
காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் பல்கலை வளாகத்தில் சிலை நிறுவும் போது ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி,  கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை உறுதிசெய்த கானா பல்கலைக்கழக நிர்வாகமானது, இந்த சம்பத்திற்கு கானா நாட்டின் வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் அகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com