இலங்கையில் 17-ஆம் தேதி புதிய பிரதமர் நியமனம்: சிறீசேனா அதிரடி அறிவிப்பு

இலங்கையில் வரும் திங்கள்கிழமை(டிச.17) புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அதிபர் மைத்ரிபால சிறீசேனா
இலங்கையில் 17-ஆம் தேதி புதிய பிரதமர் நியமனம்: சிறீசேனா அதிரடி அறிவிப்பு

இலங்கையில் வரும் திங்கள்கிழமை(டிச.17) புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்த நிலையில், சிறீசேனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டமைப்பின் கூட்டம் அதிபர் சிறீசேனா தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
இக்கூட்டத்தில், அதிபர் சிறீசேனா தெரிவித்ததாக இலங்கையின் இணையப் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சியின் கீழ் நாடு வீழ்ச்சியை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று சுதந்திரா கட்சியின் எம்.பி.க்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அக்கட்சிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். 
நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். புதிய பிரதமரை வரும் திங்கள்கிழமை நியமிக்க உள்ளேன். ஆனால், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், சிறீசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபட்சவும் கலந்துகொண்டார்.
பின்னணி: ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவை சிறீசேனா நியமித்தற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், நாடாளுமன்றத்தையும் கலைத்து, தேர்தல் நடத்துவதற்கு அவர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. 
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ராஜபட்ச அரசுக்கு எதிராக ரணில் கட்சியால் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பின் மூலம், குறைந்தபட்சம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நாடாளுமன்றத்தை சிறீசேனாவால் கலைக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் ராஜபட்ச!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச இலங்கையின் பிரதமராகச் செயல்பட அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் ராஜபட்சவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ராஜபட்ச பிரதமராகச் செயல்படவும், அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் தங்களது துறைகளில் தொடர்ந்து பணியாற்றவும் இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச மேல்முறையீடு செய்தார். இதனை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், "இந்த மனுவின் மீதான விசாரணை முடியும்வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்க முடியாது' என்று தெரிவித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ராஜபட்ச இன்று பதவி விலகல்: இதனிடையே ராஜபட்சவின் மகன் நமல் சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "இலங்கையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். 
அவர் சனிக்கிழமை (டிச.15) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிறகு பதவி விலகுவார். சிறீசேனாவின் சுதந்திரா கட்சியுடன் இணைந்து, பெரும் அரசியல் கூட்டணியை உருவாக்க அவர் தொடர்ந்து பணியாற்றுவார்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com