பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: தெரசா மே கோரிக்கையை நிராகரித்தது ஐரோப்பிய யூனியன்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்கும் வகையில், அதில் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே-வின் கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நிராகரித்தது.
ஐரோப்பிய யூனியன் கூட்டத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள்.
ஐரோப்பிய யூனியன் கூட்டத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்கும் வகையில், அதில் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே-வின் கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நிராகரித்தது.
மேலும், ஒப்பந்தம் முறிந்தால் எந்த வித உடன்பாடும் இல்லாமல் பிரிட்டனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து பிரிட்டன் அதிகாரிகள் கூறியதாவது:
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் வியாழக்கிழமை தொடங்கிய ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பங்கேற்றார்.
அப்போது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்ஸிட்) பிறகு, அந்த அமைப்பின் எஞ்சிய உறுப்பு
நாடுகளும், பிரிட்டனும் பின் பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அந்த ஒப்பந்தத்தில், வடக்கு அயர்லாந்து தொடர்பான சர்ச்சைக்குரிய பிரிவை செயல்படுவதற்கு கால வரையறை விதிக்கப்பட்ட வேண்டும் என்று தெரசா மே கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறு கால வரையறை நிர்ணயித்தால்தான், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் ஏற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
எனினும், அதற்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், பிரதமர் தெரசா மே அங்கிருந்து சென்ற பிறகு, பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் மறு பேரத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என 27 உறுப்பு நாடுகளும் உறுதிபூண்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெரசா மே அமைச்சரவையைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர்.
இந்தச் சூழலில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
எனினும், தற்பொதுள்ள சூழலில் அந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அது நிராகரிக்கப்படும் எனக் கூறி, அந்த வாக்கெடுப்பை பிரதமர் தெரசா மே ஒத்திவைத்தார்.
எம்.பி.க்களின் கோரும் சில உத்தரவாதங்களை ஐரோப்பிய யூனியனிடமிருந்து பெற்ற பிறகே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடவிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் தெரசா மே-வுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்தச் சூழலில்தான், பிரெக்ஸிட் ஒப்பந்தப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய தெரசா மே விடுத்த கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நிராகரித்துள்ளது.

ஏன் இந்த எதிர்ப்பு?

அயர்லாந்து தீவின் வடக்கே அமைந்துள்ள வடக்கு அயர்லாந்து, தற்போது பிரிட்டனின் அங்கமாக இருந்து வருகிறது.
தற்போதைய சூழலில் இரு பகுதிகளுமே ஐரோப்பிய யூனியனின் அங்கம் என்ற வகையில், அயர்லாந்துக்கும், வடக்கு அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக கெடுபிடிகள் இல்லாத நிலை உள்ளது.
எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு அயர்லாந்து நாடு ஐரோப்பிய யூனியனின் அங்கமாகவும், வடக்கு அயர்லாந்து நாடு பிரிட்டனின் அங்கமாகவும் மாறி விடுவதால், இரு பகுதிகளுக்கும் இடையே வர்த்தகப் பிரிவினை ஏற்பட்டு, கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனை ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் விரும்பவில்லை.
எனவே, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து இடையே சுதந்திர வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியான சிறப்பு சலுகைகளை, பிரெக்ஸிட் ஒப்பந்தம் வழங்குகிறது. எனினும், தங்களது நாட்டின் ஓர் அங்கமான வடக்கு அயர்லாந்துக்கு அத்தகைய சிறப்பு சலுகை வழங்குவது, நாட்டின் இறையாண்மையை குலைக்கும் செயல் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வடக்கு அயர்லாந்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்துக்குக்கு காலக் கெடு விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுதொடர்பாக பிரதமர் தெரசா மே முன்வைத்த கோரிக்கையைத்தான் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தற்போது நிராகரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com