இலங்கை: பதவி விலகினார் ராஜபட்ச: மீண்டும் பிரதமராகிறார் ரணில்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். 
இலங்கை: பதவி விலகினார் ராஜபட்ச: மீண்டும் பிரதமராகிறார் ரணில்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். 
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (டிச.16) ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் சிறீசேனா-ராஜபட்ச கூட்டணிக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த இரண்டு அதிரடித் தீர்ப்புகளையடுத்து ராஜபட்ச இந்த முடிவை எடுத்துள்ளார். இது குறித்து, ராஜபட்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சினேகன் செமசிங்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், ""கொழும்பில் உள்ள தனது வீட்டில் ராஜபட்ச பதவி விலகல் கடிதத்தில் சனிக்கிழமை கையெழுத்திட்டார். ராஜிநாமா செய்வது குறித்து, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு அவர் ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டார்'' என்றார்.
மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்: பதவி விலகல் குறித்து ராஜபட்ச செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எனது கட்சி வலியுறுத்தி வந்தது. தேர்தலில் வெற்றி பெறாமல் பிரதமராகச் செயல்பட நான் விரும்பவில்லை. மேலும், அதிபரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும் நான் விரும்பவில்லை. 
அரசியலில் மக்கள் மிகப்பெரும் மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றனர். அந்த எதிர்பார்ப்புக்குத் தற்போது சிறிய அளவிலான தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவில் நிறைவேறும் என்று அவர் தெரிவித்தார். 
புதிய பிரதமர் ரணில்: இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க அதிபர் சிறீசேனா ஒப்புக்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து, வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக சிறீசேனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விரஜ் கரியவாசம் கூறுகையில், ""ரணிலுக்கு அதிபர் சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக அவரின் செயலர் தெரிவித்தார்'' என்றார். 
இந்நிலையில், 30 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அமைச்சரவையில் அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இடம்பெற இருப்பதாகவும் தெரிகிறது.
பின்னணி: ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ராஜபட்சவை நியமித்த அதிபர் சிறீசேனாவின் முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ரணிலும் தான் பிரதமராகவே நீடிப்பதாக அறிவித்தார். நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவும் அரசியலமைப்புச் சட்டப்படி ரணிலே பிரதமர் என்று அறிவித்தார். 
இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட சிறீசேனா, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். சிறீசேனாவின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், கரு ஜெயசூர்யா நாடாளுமன்றத்தைக் கூட்டினார். 
இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சிறீசேனா-ராஜபட்ச கூட்டணி தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது. 

ராஜபட்ச உரை

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகும் முன்பு ராஜபட்ச, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆட்சி செய்வோரால் ஒட்டுமொத்த நாடே அழிவை சந்தித்து கொண்டிருக்கிறது. அதை அதிபரால் எதிர்க்கவோ அல்லது எதுவும் செய்யவோ முடியாது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதி என்னை பிரதமராக நியமித்து, அதிபர் எடுத்த துணிச்சலான மற்றும் கடினமான முடிவை வரவேற்கிறேன். ஐக்கிய தேசிய கட்சியின் அரசால் மூன்றரை ஆண்டுகளில் 20.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வாங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இன்னும் எவ்வளவு கடன் வாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
ஒரே குழுவை சேர்ந்தவர்களே, கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து அரசு பதவிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவால் ஒட்டுமொத்த நாடும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.இன்னொரு கிரீஸ் நாடாக இலங்கை மாறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தோம். இந்தத் திட்டம் எதையும் எனது அரசால் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது என்றார் ராஜபட்ச.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com