மாலத்தீவு அரசியல் நெருக்கடி: மோடி - டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலமாகப் பேசிக் கொண்டனர். அப்போது, அரசியல் குழப்பம் நிலவும் மாலத்தீவின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.
மாலத்தீவு அரசியல் நெருக்கடி: மோடி - டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலமாகப் பேசிக் கொண்டனர். அப்போது, அரசியல் குழப்பம் நிலவும் மாலத்தீவின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த ஆண்டில், தலைவர்கள் இருவரும் தொலைபேசி வழியாக உரையாடியது இதுவே முதல் முறையாகும். 
மாலத்தீவில் சிறையில் இருக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு, அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 2 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து, சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, மாலத்தீவில் அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தொலைபேசி வழியாக உரையாடிய பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும், மாலத்தீவின் அரசியல் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்தனர். சட்டத்துக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் அவர்கள் உறுதியேற்றனர். மேலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இருவரும் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ரோஹிங்கயா அகதிகள் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்தனர். மியான்மரில் இருந்து சுமார் 6.8 லட்சம் அகதிகள், அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதற்கு இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. ஆனால், ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதற்குச் சரியான நேரம் இதுவல்ல என்று அமெரிக்கா கருதுகிறது.
இறுதியாக, இந்தியா, அமெரிக்கா இடையே ராணுவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இரு நாட்டு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை, வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு மோடியும், டிரம்ப்பும் ஒப்புக்கொண்டனர் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸூம் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com