ஹபீஸ் சயீது அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
ஹபீஸ் சயீது அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அதைத் தவிர, ஃபாலாஹ்-ஐ-இன்சானியாத், அல் அக்தர், அல் ரஷீத் ஆகிய பயங்கரவாத அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹூசைன் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக இத்தகைய முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள சர்வதேச நிதிசார் செயல் திட்ட மாநாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களும், தடை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த அவசரச் சட்டத்தை அந்நாடு அமலாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விவரங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'டான்' நாளிதழில் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த நிறுவனங்களுக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்திய தேச வரலாற்றின் பெருந்துயரமாகக் கருதப்படும் அச்சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஹஃபீஸ் சயீது. அவரை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தீவிர முயற்சியெடுத்தது. அதன் விளைவாக அவருக்கும், அவர் சார்ந்துள்ள ஜமாத்-உத்-தவா அமைப்புக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேசத் தடை விதித்தது.
அதேவேளையில், பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சயீதுக்கோ, அவரது அமைப்புக்கோ எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் சுதந்திரமாக உலவ விட்டது. அதில் உச்சமாக, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அவரை சிறையில் இருந்து அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அனைத்துக்கும் மேலாக, அடுத்து வரும் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹஃபீஸ் அறிவித்தார். சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக அங்கீகாரம் அளிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் செயல்பட்டது உலக நாடுகளை உச்சகட்ட அதிருப்திக்கு ஆளாக்கியது.
நிதிசார் செயல்திட்ட மாநாடு: இந்நிலையில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நிதிசார் செயல்திட்ட மாநாடு (எஃப்ஏடிஎஃப்) வரும் 18-ஆம் தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. பன்னாட்டு பொருளாதார முதலீடுகள், பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் அதில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுக்காததற்காக பாகிஸ்தான் மீது சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளை கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே எஃப்ஏடிஎஃப் அமைப்பு விதித்திருந்தது. தற்போதைய மாநாட்டிலும் அத்தகைய தடையை பாகிஸ்தான் மீது உலக நாடுகள் விதிக்கலாம் எனத் தெரிகிறது.
இதனால், சர்வதேச அரங்கில் மேலும் ஒரு நெருக்கடி நிலைக்கு ஆளாகக்கூடும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான், தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளுக்கும் தாங்களும் தடை விதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களையும் அந்நாடு மேற்கொண்டுள்ளது. 
சொத்துகள் பறிமுதல்
ஹஃபீஸ் சயீதின் ஜமாத் - உத் - தவா மற்றும் அதன் கிளை அமைப்பான ஃபாலாஹ்-ஐ-இன்சானியாத் ஆகியவற்றுக்குச் சொந்தமான 60 பள்ளிகள், நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் 150 ஆம்புலன்ஸ் வாகனங்களைக் கையகப்படுத்தப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் கையகப்படுத்திய பிறகு அவற்றை பாகிஸ்தான் அரசே நிர்வகிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஃபீஸ் சயீதின் அமைப்புக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com