ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ராஜிநாமா! 

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா வியாழன் அன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ராஜிநாமா! 

பிரிட்டோரியா: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா வியாழன் அன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க அதிபராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேக்கப் ஜூமா (75), பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளார். மேலும், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, அதிகரித்து வரும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஆகிய காரணங்களால் அவருக்கு எதிரான அதிருப்தி அலை வீசி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அதிபட்சமாக இருமுறை அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள ஜூமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அவரை பதவி விலகுமாறு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த 4-ஆம் தேதி வலியுறுத்தியது.  எனினும், அதனை ஏற்க ஜூமா மறுத்துவிட்டார்.

எனவே பிரிடோரியா நகருக்கு வெளியே அமைந்துள்ள ஹோட்டலொன்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 107 உறுப்பினர்கள் அடங்கிய கட்சியின் தேசிய செயற்குழு ஜூமாவை பதவியிலிருந்து நீக்க முடிவு செய்தது.

ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தின்படி, ஒரு அதிபரை பதவி விலகுமாறு கட்டளையிட அவர் சார்ந்துள்ள ஆளும் கட்சிக்கு அதிகாரம் உள்ளது. எனினும், அந்தக் கட்டளையை அதிபர் ஏற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை. அந்த வகையில், அதிபர் ஜூமா பதவி விலக மறுப்பு தெரிவித்தால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அவரை பதவியிலிருந்து நீக்கும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் பொருளாளர் பால் மாஷடைல் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, "அதிபர் ஜேக்கப் ஜூமாவை பதவியிலிருந்து நீக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வியாழக்கிழமை கொண்டு வரும்படி கட்சியின் தலைமை கொறடாவைக் கேட்டுக் கொண்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த அதிபராக கட்சித் தலைவர் சிரில் ராமபோஸா தேர்ந்தெடுக்கப்படுவார்." என்று தெரிவித்தார்.  

இந்நிலையில் வியாழன் அன்று தேசிய தொலைக்காட்சியில் தோன்றி சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றிய அதிபர் ஜேக்கப் ஜூமா, தான் உடனடியாக நாட்டின் அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சிரில் ராமபோஸா வியாழன் அல்லது வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com