அமெரிக்க பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளி ஒன்றில் 19 வயது முன்னாள் மாணவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

இந்திய வம்சாவளி மாணவர் உள்பட 12 பேர் காயம்
அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளி ஒன்றில் 19 வயது முன்னாள் மாணவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். எஃப்பிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நிகோலஸ் குரூஸ் என்ற அந்த மாணவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர் நிலைப் பள்ளியில் புதன்கிழமை திடீரென புகுந்த நிகோலஸ் குரூஸ் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். 
பள்ளி முடிவடைந்துவிட்டது என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை மணியையும் நிகோலஸ் ஒலிக்கச் செய்தார். இதன்மூலம், அதிக மாணவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருக்கலாம்.
ஆனால், அன்றைய தினம் பள்ளி தொடங்குவதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எதிர்கொள்வது தொடர்பாக நடத்தப்பட்ட பயிற்சியில் இதுகுறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் யாரும் வெளியே வரவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 
இந்தத் தாக்குதலில் 9-ஆம் வகுப்புப் படித்துவரும் இந்தியாவைப் பூர்விகக் கொண்ட மாணவர் உள்பட காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்த போலீஸார் நிகோலஸை கைது செய்தனர். அவரது உடைமைகளில் சோதனை செய்தபோது, கொள்கைகளைக் குறிப்பிட்டிருக்கும் இதழ்கள், ஏஆர்-15 ரக துப்பாக்கி ஒன்றும் கிடைத்தது. அவை கைப்பற்றப்பட்டன. அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தன்னிடம் உள்ள ஆயுதங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் நிகோலஸ் பதிவேற்றம் செய்திருக்கிறார். 
சில பிரச்னைகளில் சிக்கிய அவருக்கு எதிராக அந்தப் பள்ளி நிர்வாகம் அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவரின் தந்தையின் நண்பரும், இந்திய-அமெரிக்கருமான சேகர் ரெட்டி கூறுகையில், 'அமெரிக்காவுக்கு இது ஒரு சோகமான நாள். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம்' என்றார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, பார்க்லேண்ட் நகரின் மக்கள் தொகை 31,000. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள இந்த நகரம் நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என்று ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் கனக்டிகட் நகரில் உள்ள நியூடவுனில் சாண்டி ஹூக் தொடக்க பள்ளியில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.
பொதுமக்கள் தங்களின் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்துக் கொள்ள அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இதனால், இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அவ்வப்போது அங்கே அரங்கேறி வருகின்றன. பொதுமக்கள் துப்பாக்கியை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் சட்டத்துக்கு அங்குள்ளவர்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com