ஊழல் புகார்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜூமா ராஜிநாமா: கட்சி நிர்பந்தத்துக்குப் பணிந்தார்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நிர்பந்தத்தை ஏற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஊழல் புகார்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜூமா ராஜிநாமா: கட்சி நிர்பந்தத்துக்குப் பணிந்தார்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நிர்பந்தத்தை ஏற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக ஆளுங்கட்சி வியாழக்கிழமை கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து 75 வயதாகும் ஜேக்கப் ஜூமா தொலைக்காட்சியில் புதன்கிழமை நள்ளிரவு ஆற்றிய உரையில் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்க அதிபர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்கிறேன். எனது இந்த பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
என்னை பதவியிலிருந்து அகற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவோடு எனக்கு உடன்பாடு இல்லை. எனினும், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பேன்.
நான் தற்போது ராஜிநாமா செய்யவில்லை என்றால், தென் ஆப்பிரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து என்னை பதவியிலிருந்து அகற்றியிருக்கும்.
அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பதவியிலிருந்து விலகுகிறேன். எனக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, தகுதி நீக்க நடவடிக்கை மீது துளியும் அச்சமில்லை. அது இந்த அற்புதமான நாட்டின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளே ஆகும் என்றார் அவர்.
முன்னதாக, தொலைக்காட்சியொன்றுக்கு ஜூமா அளித்த பேட்டியில், பதவியிலிருந்து விலகுவதற்காக ஆளும் கட்சி உரிய காரணத்தைக் கூறவில்லை என்பதால், தாம் பதவி விலகப்போவதில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போது ராஜிநாமா அறிவிப்பை ஜூமா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பல நம்பிக்கையில்லா தீர்மானங்களில் ஜூமா வெற்றி பெற்று தனது பதவியைத் தக்க வைத்ததன் மூலம், ஜூமா 9 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செலுத்தி வந்தார்.
கொண்டாட்டம்: ஜூமாவின் ராஜிநாமா செய்ததை தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுக்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க அதிபராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேக்கப் ஜூமா , பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளானார்.
மேலும், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, அதிகரித்து வரும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஆகிய காரணங்களால் அவருக்கு எதிரான அதிருப்தி அலை வீசி வந்தது. ஏற்கெனவே அதிபட்சமாக இருமுறை அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள ஜூமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், அவரை பதவி விலகுமாறு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த 4-ஆம் தேதி வலியுறுத்தியது. எனினும், அதனை ஏற்க ஜூமா மறுத்துவிட்டார்.
இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 107 உறுப்பினர்களை அடங்கிய கட்சியின் தேசிய செயற்குழு ஜூமாவை பதவியிலிருந்து நீக்க முடிவு செய்தது.
மேலும், கட்சியின் கட்டளைப்படி அவர் ராஜிநாமா செய்யவில்லை என்றால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வியாழக்கிழமை கொண்டு வரப்படும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பால் மாஷடைல் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
புதிய அதிபராக சிரில் ராமபோஸா தேர்வு
அதிபர் ஜூமாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிரில் ராமபோஸாவை புதிய அதிபராக தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது. 65 வயதாகும் ராமபோஸாவுக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையில், அவரை நாடாளுமன்றம் போட்டியின்றி தேர்ந்தெடுத்தது. இதுதொடர்பான விவாதத்தின்போது, எதிர்க்கட்சியான சுதந்திரப் போராளிகள் கட்சி வெளிநடப்பு செய்ததது.
பணக்கார தொழிலதிபர் பின்னணியைக் கொண்டுள்ள சிரில் ராமபோஸா, தென் ஆப்பிரிக்க மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மக்களின் தொண்டனாக ஆட்சி புரியவிருப்பதாக உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com