சிறுமி சைனாப்பை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பு

சிறுமி சைனாப் அமினை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி சைனாப்பை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தானில் கடந்த மாதம் 9-ந் தேதி சைனாப் அமின் என்ற 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக ஒரு பெண் பத்திரிகையாளர் தனது பெண் குழந்தையுடன் செய்தி வாசித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது, பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி மாயமான சைனாப் அமீன், நான்கு நாள்கள் கழித்து ஜனவரி 9-ந் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பிரேத விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த கொலை விவகாரத்தில் தொடர்புடைய இம்ரான் அலி (வயது 24) என்பவரை ஜனவரி 23-ஆம் தேதி கைது செய்து லாகூர் மத்திய சிறையில் அடைத்தது.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி காதீர், கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பயங்கரவாத குற்றங்களுக்கு 4 மரண தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாகிஸ்தான் மதிப்பில் 2 மில்லியன் டாலர்கள் அபராதம், அந்த சிறுமியை கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசிய குற்றத்துக்காக 7 வருட கடுங்காவல் தண்டனை உள்ளிட்டவைகளை வழங்கி உத்தரவிட்டார்.  

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சைனாப் அமீன் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவரான இம்ரான் அலி, அந்தச் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com