ஃப்ளோரிடா துப்பாக்கிச் சூடு: மாணவர்களை சாமர்த்தியமாகக் காப்பாற்றிய இந்திய ஆசிரியர்

அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளி ஒன்றில் 19 வயது முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஃப்ளோரிடா துப்பாக்கிச் சூடு: மாணவர்களை சாமர்த்தியமாகக் காப்பாற்றிய இந்திய ஆசிரியர்


நியூ யார்க்: அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளி ஒன்றில் 19 வயது முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நிகோலஸ் குரூஸ் என்ற அந்த மாணவரை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது, அந்த பள்ளியில் கணிதப் பாடம் எடுக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியை, மிக சாமர்த்தியமாக செயல்பட்டு தனது மாணவர்களை காப்பாற்றி ஹீரோவாக மாறியுள்ளார்.

சாந்தி விஸ்வநாதன் என்ற அந்த ஆசிரியை, பள்ளியில் அபாய ஒலி அடித்ததும், தனது வகுப்புப் பிள்ளைகள் அறையில் இருந்து வெளியேற முற்பட்ட போது அவர்களை தடுத்தார். அவர்களை வெளியேற விடாமல் வகுப்புக்குள் ஒரு மூலையில் அமருமாறு பணித்தார்.

உடனடியாக வகுப்பறையின் ஜன்னல் கண்ணாடிகளில் காகிதங்களை ஒட்டி உள்ளே மாணவர்கள் இருப்பதை வெளியே இருந்து பார்க்க முடியாதபடி செய்தார். 

இதற்கிடையே, பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் அங்கிருந்து தப்பிச் செல்ல, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம் வந்த பிறகு, அவர்கள் கதவை திறக்கும்படி கூறியும் ஆசிரியை சாந்தி கதவை திறக்கவில்லை. 

உங்களிடம் சாவி இருந்தால் திறந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் கதவை உடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அவரது தைரியமான சாமர்த்தியமான இந்த செயலை பாதுகாப்புப் படையினர் வெகுவாகப் பாராட்டினார்கள்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர் நிலைப் பள்ளியில் புதன்கிழமை திடீரென புகுந்த நிகோலஸ் குரூஸ் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

பள்ளி முடிவடைந்துவிட்டது என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை மணியையும் நிகோலஸ் ஒலிக்கச் செய்தார். இதன்மூலம், அதிக மாணவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருக்கலாம்.

சில பிரச்னைகளில் சிக்கிய அந்த மாணவருக்கு எதிராக அந்தப் பள்ளி நிர்வாகம் அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com