ஈரானில் விமானம் மலையில் மோதி விபத்து: 66 பேர் சாவு

ஈரான் நாட்டில், மலைப்பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரானில் விமானம் மலையில் மோதி விபத்து: 66 பேர் சாவு

ஈரான் நாட்டில், மலைப்பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்பஹான் மாகாணத்திலுள்ள யாசுஜ் நகரை நோக்கி விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குச் சென்றது. அந்த விமானத்தில் 60 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர்.
யாசுஜ் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, செமிரோம் நகரத்துக்கு அருகே பனிமூட்டம் சூழ்ந்த ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள டேனா மலை மீது மோதி வெடித்து சிதறியது.
இந்த பயங்கர விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை உள்ளிட்ட 60 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜாக்ரோஸ் மலைப் பகுதியில் நிலவும் பனிமூட்டத்தின் காரணமாக, அப்பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர்கள் செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விமான விபத்துக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலையில் மோதி விபத்துள்ளான விமானம், ஆசிமான் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். டெஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டு அந்த விமான நிறுவனம் செயல்படுகிறது.
அணுஆயுதங்கள், ஏவுகணைகள் தயாரிப்பு விவகாரங்கள் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன. இதன் காரணமாக, ஈரானால் புதிய விமானத்தையோ, விமானத்துக்கான புதிய உதிரி பாகங்களையோ வாங்க முடியாத நிலை நிலவியது. இதனால், ஈரானில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் அனைத்தும் மிகவும் பழைமையானதாக உள்ளன. எனவே, ஈரானில் அண்மைக்காலமாக விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகின்றது.
இருப்பினும், அணுஆயுத விவகாரம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையை செய்தது. இதையடுத்து, சர்வதேச விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர் பஸ் ஆகியவற்றுடன் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களை ஈரான் மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com