எங்களிடம் அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் உள்ளன: வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வட கொரிய அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, எங்களிடம் அந்த நாட்டைவிட மிகப் பெரிய, சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் இருக்கின்றன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை (கோப்புப் படம்).
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை (கோப்புப் படம்).

வட கொரிய அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, எங்களிடம் அந்த நாட்டைவிட மிகப் பெரிய, சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் இருக்கின்றன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையில், தென் கொரியாவில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
எனினும், அமெரிக்காவைத் தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணைகளும் இருப்பதாகக் கூறிய அவர், அந்த அணு ஆயுதங்களை இயக்கக் கூடிய கட்டுப்பாட்டு விசை தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாக எச்சரித்தார். 
இந்த நிலையில், கிம் ஜோங்-உன்னின் மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: தனது மேஜையில் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விசை எப்போதும் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சொல்லியிருக்கிறார்.
அவரிடம் இருப்பதைவிட மிகவும் பெரிதான, அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விசை என்னிடமும் இருக்கிறது என்பதை, மக்களைப் பட்டினியால் வாடவிட்டு அணு ஆயுதம் தயாரிக்கும் அவரிடம் யாராவது தெரியப்படுத்த வேண்டும்.
இரண்டு பேரிடமும் கட்டுப்பாட்டு விசைகள் இருந்தாலும், என்னிடம் உள்ளது வேலை செய்யும் என்பதுதான் ஒரே வித்தியாசம் என்று அந்த சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளால் உலக அமைதிக்கே அச்சுறுத்தல் எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் மாளிகை, அந்த நாட்டுக்கு எதிரான நிர்பந்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அணு ஆயுதங்களைப் பெறுவதற்கு எதிராக, வட கொரியாவுக்கு நெருக்கடி கொடுப்பதில் அமெரிக்கா தனது கவனத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முயற்சியில் உலக நாடுகளும் பங்கேடுக்க வேண்டும். வட கொரியாவின் அணு ஆயுதங்கள் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தல் ஆகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com