அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பு: இந்தியாவுக்கு மீண்டும் அமெரிக்கா ஆதரவு

சர்வதேச அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அந்நாடு மீண்டும் உறுதியளித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அந்நாடு மீண்டும் உறுதியளித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு மாற்றாக மிகப் பெரிய வர்த்த கேந்திரமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது நம் நாட்டுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில் அமெரிக்கா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கெனித் ஜஸ்டர், இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா திகழ்கிறது. அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும். அந்த நோக்கத்தை வென்றெடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. 
ஆசிய - பசிபிக் நீர்வழித் தடத்தில் சர்வதேச விதிகளுக்குட்பட்டு கட்டுப்பாடுகளின்றி போக்குவரத்து மேற்கொள்வதற்கான நிலை உருவாக வேண்டும். அதற்கு முன்னதாக அங்கு நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம்.
ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழலை நிலவச் செய்ய வேண்டும் என்றே இரு தரப்பும் விரும்புகின்றன. அதில் இந்தியா ஆற்றி வரும் பங்களிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நலனுக்காக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அங்கு சுமுகமான சூழல் உருவாக வாய்ப்பில்லை என்றாலும்கூட, அதையெல்லாம் கடந்தும் இந்தியா சிறப்பான பங்களிப்பை நல்கி வருகிறது.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கேந்திரமாக இந்தியா உருவெடுக்க வேண்டும். சீனாவுக்கு மாற்றாக அந்த இடத்தை இந்தியா பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தானைப் பொருத்தவரை பயங்கரவாதிகளின் புகலிடங்களை வேரறுக்க அந்நாட்டுத் தலைவர்கள் முன்வரவில்லை. அதன் காரணமாகவே அந்நாட்டுக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
சர்வதேச அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக அமெரிக்கா ஆதரவளிக்கும். இதற்காக தோழமை நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com