எரியும் ஈரானியக் கப்பலில் இருந்து 2 உடல்கள் மீட்பு

சீனக் கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் மோதி கடந்த சனிக்கிழமை முதல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பலிலிருந்து மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்
ஈரானிய எண்ணெய்க் கப்பலில் எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் சீனக் கப்பல் (கோப்புப் படம்).
ஈரானிய எண்ணெய்க் கப்பலில் எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் சீனக் கப்பல் (கோப்புப் படம்).

சீனக் கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் மோதி கடந்த சனிக்கிழமை முதல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பலிலிருந்து மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான சிசிடிவி கூறியதாவது:
சரக்குக் கப்பலுடன் மோதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய் கப்பலில் இருந்து மேலும் 2 உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
அந்தக் கப்பலில், அவசரகாலப் படகுகள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து அந்த உடல்கள் மீட்கப்பட்டன.
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் அந்தக் கப்பலில், மீட்புக் குழுவினர் 30 நிமிடங்கள் இருந்து உடல்களையும், கப்பலின் மின்னணு தகவல் பதிவுகள் மற்றும் விடியோ பதிவுகளையும் மீட்டு வந்தனர்.
கப்பலில் பணியாளர்கள் வசிக்கும் பகுதிக்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத அளவுக்கு 89 டிகிரி செல்ஷியஸ் வரை அங்கு கடும் வெப்பம் நிலவியது. அதையடுத்து அங்கு செல்ல முடியாமல் குழுவினர் திரும்பி வந்தனர் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
ஈரானைச் சேர்ந்த "நேஷனல் ஈரானியன் டேங்கர் கம்பெனி'க்குச் சொந்தமான, பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட சாஞ்சி எண்ணெய்க் கப்பல், தென் கொரியாவை நோக்கி சீனாவையொட்டிய கடல் பகுதி வழியாக சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. 274 மீட்டர் நீளமுள்ள அந்தக் கப்பலில் 1.36 லட்சம் டன் திரவ எரிபொருள் ஏற்றப்பட்டிருந்தது.
அந்தக் கப்பலில் ஈரானைச் சேர்ந்த 30 பணியாளர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பணியாளர்களும் இருந்தனர்.
இந்த நிலையில், 64,000 டன் தானியங்களை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்த ஹாங்காங் கப்பல் மீது சாஞ்சி எண்ணெய்க் கப்பல் பலமாக மோதியது.
இதில், அந்த எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து தொடர்ந்து எரிந்து வருகிறது.
அந்தக் கப்பல் எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம், அல்லது கடலுக்குள் மூழ்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், சீன மீட்புக் குழுவினர் அந்தப் பகுதியில் மாயமானவர்களைத் தேடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஏற்கெனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு உடலை மீட்டுள்ள மீட்புக் குழுவினர், தற்போது மேலும் இரு உடல்களைக் கண்டெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது அந்தக் கப்பலில் இருந்த மேலும் 29 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
"நேஷனல் ஈரானியன் டேங்கர் கம்பெனி'க்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளாவது, கடந்த 2 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கெனவே, அந்த நிறுவனத்தின் எண்ணெய்க் கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோதி ஏற்பட்ட விபத்தில், இரு கப்பல்களும் சேதமடைந்தன.
எனினும், அந்த விபத்தில் உயிர்ச் சேதமோ, சுற்றுச்சூழல் சீர்கோடோ ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com