ஆப்பிரிக்க நாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம், மியாமி நகரில் வெள்ளிக்கிழமை ஆர்
ஆப்பிரிக்க நாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம், மியாமி நகரில் வெள்ளிக்கிழமை ஆர்

டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய கருத்து: ஆப்பிரிக்க நாடுகள் கொந்தளிப்பு

ஆப்பிரிக்க நாடுகள் குறித்து தகாத வார்த்தையைப் பயன்படுத்தி டிரம்ப் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து ஆப்பிரிக்க நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகள் குறித்து தகாத வார்த்தையைப் பயன்படுத்தி டிரம்ப் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து ஆப்பிரிக்க நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, 55 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆப்பிரிக்க யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா.வில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளின் தூதர்களும், டிரம்ப் அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான ஆப்பிரிக்கத் தூதர்களின் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் கூறியதாக ஊடகங்களில் வெளியான நிறவெறியையும், வெளிநாட்டினர் மீதான வெறுப்பையும் வெளிப்படுத்தும் வார்த்தை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அந்த வார்த்தையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திரும்பப் பெற வேண்டும். மேலும், அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆப்பிரிக்க யூனியனின் செய்தித் தொடர்பாளர் எப்பா கலோண்டோ கூறியதாவது:
ஆப்பிரிக்க நாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய வார்த்தை நிறவெறியை வெளிப்படுத்துகிறது என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.
குறிப்பாக, ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பினத்தவர் அமெரிக்காவுக்கு அடிமைகளாக அழைத்துவரப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் இந்த வார்த்தை மேலும் காயப்படுத்தும் வகையில் உள்ளது.
குடியேற்றவாசிகளால் ஒரு சிறப்பான தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை நிரூபித்த அமெரிக்காவின் அதிபர் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உண்மையில், அமெரிக்காவின் பண்பை ஒற்றை நபரின் கருத்து பிரதிபலிக்க முடியாது என்றார் அவர்.
குடியேற்றவாசிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த விவகாரம் குறித்து டொனால்ட் டிரம்ப்பை அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது.
அப்போது, சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஹைட்டி நாட்டவர்களுக்கு குடியேற்ற உரிமை வழங்க வேண்டும் என்று எம்.பி.க்கள் டொனால்ட் டிரம்ப்பிடம் வலியுறுத்தினர்.
அப்போது, "அருவருப்பை ஏற்படுத்தும்' என்னும் பொருள்படும் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி, அத்தகைய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏன் அமெரிக்காவில் குடியேற்ற வேண்டும்? என்று டொனால்ட் டிரம்ப் கேள்வியெழுப்பியதாக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பதிலாக நார்வே நாட்டவர்களை ஏன் அதிக அளவில் அனுமதிக்கக் கூடாது எனவும் டிரம்ப் கேட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தக் கருத்துக்கு அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டிரம்ப்பின் இந்தக் கருத்துகள் இனவெறியை வெளிப்படுத்துவதாகவும், அவை அமெரிக்காவின் உண்மையான பண்பை வெளிப்படுத்துவதாக இல்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
டிரம்பின் இந்தக் கருத்து அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடிய வார்த்தை; அந்தக் கருத்தால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா. அமைப்பும் கண்டனம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com