பாகிஸ்தான்: தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலை தாக்குதல்: 20 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில், அவாமி தேசிய கட்சியின் (ஏஎன்பி) மூத்த தலைவர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில், அவாமி தேசிய கட்சியின் (ஏஎன்பி) மூத்த தலைவர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அவாமி தேசிய கட்சியின் சார்பில் பெஷாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், பெஷாவர் நகரிலுள்ள பிகே-78 தொகுதி வேட்பாளருமான ஹாரூன் பிலோர் கலந்துகொண்டார். 
அப்போது, அந்த கூட்டத்தில் புகுந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, தான் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில், ஹாரூன் பிலோர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய 2-ஆவது தாக்குதல் இதுவாகும். கைபர்-பக்துன்வா மாகாணத்தின் தக்டிகல் பகுதியில் சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
மதச்சார்பின்மை கொள்கையுடைய அவாமி தேசிய கட்சி, கைபர்-பக்துன்வா மாகாணத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. அப்போது, வடமேற்கு பகுதியில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக அக்கட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக, அந்த கட்சியினரையும், தலைவர்களையும் குறிவைத்து, பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தற்போதைய தாக்குதலில் உயிரிழந்த ஹாரூன் பிலோரின் தந்தை பஷீர் பிலோரும், அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஆவார். அவர் கடந்த 2012-இல் தலிபான்களின் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கண்டனம்: பெஷாவர் நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் சர்தார் முகமது ரஸா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
முன்னதாக, சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் கடந்த திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com