இந்தியா - வங்கதேசம் இடையேயான பயண ஒப்பந்தம் திருத்தம்

வங்கதேச நாட்டவர் விசா பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், திருத்தியமைக்கப்பட்ட பயண ஒப்பந்தத்தில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டது.

வங்கதேச நாட்டவர் விசா பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், திருத்தியமைக்கப்பட்ட பயண ஒப்பந்தத்தில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டது.
வங்கதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, வங்கதேசத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முதியோர்கள் இருமடங்கு அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான விசா பெற முடியும்.
இதற்கிடையே, ராஜ்நாத் சிங்கும், அசாதுஸமான் கானும் இருநாட்டு பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பயங்கரவாத தடுப்பு, இரு நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, கள்ளநோட்டு ஒழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்த ஆலோசனை வெற்றிகரமாக அமைந்தது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 
வங்கதேசம் உறுதி: இதேபோல், சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம், அசாதுஸமான் கான் பேசுகையில், வங்கதேச மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீண்டும் நினைவுகூர்ந்தார். அவர் மேலும் கூறியதாவது:
தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போரிடுவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் வங்கதேசத்துக்கு அளிப்போம் என இந்தியா உறுதி அளித்துள்ளது. 
இருநாடுகளுக்கு இடையிலான பயண நடைமுறைகளை எளிதாக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
ரோஹிங்கயா அகதிகள் விவகாரம் தொடர்பாகவும் இந்திய உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, அகதிகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.
முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலான நிவாரண பொருள்களை அனுப்பி வைப்பதாகவும் இந்தியா தெரிவித்தது என்றார் அவர்.
வங்கதேச தந்தைக்கு மரியாதை: வங்கதேச தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள அந்நாட்டு தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். வங்கதேசத்துக்கும், தெற்காசியாவுக்கும் முஜிபுர் ரஹ்மான் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, டாக்காவில் உள்ள தாகேஷ்வரி கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு நடத்தினார்.வங்கதேச விடுதலை போரை தலைமை தாங்கி நடத்தியவரான முஜிபுர் ரஹ்மான், அவரது குடும்ப உறுப்பினர்களோடு சேர்த்து கடந்த 1975-ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மகள் ஷேக் ஹசினாவே தற்போதைய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com