மரண தண்டனை: இலங்கை முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு மீண்டும் அனுமதியளிக்கும் அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவின் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு மீண்டும் அனுமதியளிக்கும் அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவின் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தலைநகர் கொழும்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா, நார்வே நாடுகளுக்கான தூதரகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் 40 ஆண்டுகளாக செயலளவில் விதிக்கப்பட்டருந்த தடையை நீக்கி, மரண தண்டனைகளை மீண்டும் நிறைவேற்ற அந்த நாடு முடிவு செய்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எத்தகைய குற்ற வழக்காக இருந்தாலும், அதற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
மரண தண்டனை என்பது மனிதப் பண்பாட்டுக்கு எதிரானதாகும். மரண தண்டனைகள் விதிக்கப்படுவதால் குற்றங்கள் குறைவதாக ஒருபோதும் நிரூபிக்கப்பட்டதில்லை.
மேலும், தவறான நீதி வழங்கப்படும்போது அந்தத் தவறினால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படுகின்றன. நீதி தவறானது என்று பிறகு தெரிந்தால், அந்த உயிர்களை திரும்ப கொண்டு வர முடியாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு, தண்டனை பெற்றவர்கள் சிறையில் இருந்துகொண்டே அந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக அதிபர் சிறீசேனா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மேலும், மரண தண்டனைகள் நிறைவேற்றங்களுக்கு செயலளவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக அவர் கூறியிருந்தார். இலங்கையில், கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அந்த தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. அவற்றில் பெரும்பாலான தண்டனைகள் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com