பாகிஸ்தான் தேர்தல்: நவாஸ் - இம்ரான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி

பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும்

பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல், வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, பேநசீர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முட்டாஹிடா மஜ்லிஸ்-இ-அமல் (எம்எம்ஏ) கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 272 இடங்களுக்கு 3,459 பேர் போட்டியிடுகின்றனர்; இதேபோல், 4 மாகாண சட்டப் பேரவைகளுக்கான 577 இடங்களுக்கு 8,396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில், பஞ்சாப் மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 95 இடங்களைக் கொண்ட அந்த மாகாணத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் அரசியல் கட்சி, பிரதமர் பதவியைக் கைப்பற்றுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, பஞ்சாப் மாகாணத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே, பஞ்சாப் மாகாணம், நவாஸ் ஷெரீஃபின் கோட்டையாக உள்ளது. ஊழல் வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்றபோதிலும், நவாஸ் ஷெரீஃபின் செல்வாக்கு சரியவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனிடையே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பஞ்சாப் மாகாணத்தில் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில், இந்தத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இனசாஃப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று இஸ்லாமாபாதைச் சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஜாஹித் ஹுசைன், டான் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, முட்டாஹிடா-இ-அமல் ஆகிய 4 நான்கு கட்சிகளிடையே போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com