சர்ச்சைக்குரிய யூத தேச' சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் அனுமதி

இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு மட்டுமே வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் குழுமிய உறுப்பினர்கள்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் குழுமிய உறுப்பினர்கள்.

இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு மட்டுமே வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இது, தங்களை இரண்டாம் நிலை குடிமக்களாக தனிமைப்படுத்தும் மதவாதச் சட்டம் என்று அரபி இஸ்ரேலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில், யூத மதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட யூத தேச சட்ட' மசோதா மீதான விவாதம், கடந்த சில நாள்களாகவே நடைபெற்று வந்தது.
இந்தச் சட்டம், அரேபிய இஸ்ரேலியர்களுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அந்த சட்ட மசோதாவில் இடம் பெற்றிருந்த, யூதர்களுக்குச் சொந்தமான அமைப்புகளுக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் அளிப்பது போன்ற கடுமையான பிரிவுகளுக்கு, அதிபர் ரூவென் ரிவ்லின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுவாக அலங்காரப் பதவியாகக் கருதப்படும் அதிபர் பொறுப்பை வகிக்கும் ரிவ்லின், யூத தேச சட்ட மசோதா இஸ்ரேலை அழித்துவிடும் என்று வெளிப்படையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், கடும் சர்ச்சைக்குரிய அம்சங்கள் மட்டும் நீக்கப்பட்டு, திருத்தியமைக்கப்பட்ட அந்த மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
நாடாளுமன்றத்தின் 120 உறுப்பினர்களில் 62 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 55 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமை யூதர்களுக்கு மட்டுமே உள்ளது. மேலும், ஹூப்ரு மொழி மட்டுமே இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக இருக்கும். அரபி மொழிக்கு இதுவரை இருந்து வந்த அந்த அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.
எனினும், அந்த மொழிக்கு சிறப்பு அந்தஸ்து மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அதனை அரசு ஆவணங்களில் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அரபு எம்.பி.க்கள் எதிர்ப்பு: இந்தச் சட்டத்துக்கு அரபு இஸ்ரேலிய எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இந்த சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், அரேபியர்களை இஸ்ரேல் இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது என்று அவர்கள் விமர்சித்தனர். எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com