போரால் பிரிந்த குடும்பங்கள் சந்திப்பு: வட கொரியா சந்தேகம்

தென் கொரியாவில் தங்கியுள்ள 12 வட கொரிய உணவக பெண் ஊழியர்களை திரும்ப அனுப்பாதவரை, கொரியப் போரினால் பிரிந்து போன குடும்ப உறுப்பினர்களை சந்திக்கச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது சந்தேகமே

தென் கொரியாவில் தங்கியுள்ள 12 வட கொரிய உணவக பெண் ஊழியர்களை திரும்ப அனுப்பாதவரை, கொரியப் போரினால் பிரிந்து போன குடும்ப உறுப்பினர்களை சந்திக்கச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது சந்தேகமே என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரியா அரசு வலைதளமான உரிமிúஸாக்கிரி கூறுகையில், வட கொரிய பெண் ஊழியர்கள் திரும்ப அனுப்பப்படாவிட்டால், போரால் பிரிந்த குடும்பத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தது.
எனினும், இதுகுறித்து கருத்து கூற தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சகம் மறுத்து விட்டது.
கடந்த 1950 முதல் 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பிரிக்கப்பட்டனர்.
எல்லையின் இருபுறங்களிலும் உள்ள உறவினர்களிடையே தொடர்புகள் முழுமையாக தடுக்கப்பட்டதால் தங்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்புக்குரியவர்களை கடைசி வரை சந்திக்க முடியாமலே மறைந்தனர். 
எனினும், அவ்வப்போது இரு கொரிய நாடுகளும் நடத்திய சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் தங்களது குடும்பத்தினரை சந்தித்து வந்தனர்.
வட கொரியா மேற்கொண்டு வந்த ஆயுத சோதனைகளும், அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மேற்கொண்டு வந்த போர் ஒத்திகையும் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை அதிகரித்து வந்தது.
இதையடுத்து, போரால் பிரிந்த குடும்பதினர் சந்திக்கும் நிகழ்ச்சிகள் கடந்த 2015-ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், இரு கொரிய நாடுகளுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், அந்த நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க இரு தரப்பினரும் கடந்த மாதம் ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில், வட கொரிய அரசு வலைதளம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com