மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புது தில்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சீனிவாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக  மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

மேலும் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லாத செல்லத்துரையை விதிகளுக்குப் புறம்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருப்பது சட்ட விரோதமானது. இது பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது. பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை துணைவேந்தர் செல்லத்துரை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்வதுடன், புதிதாக எந்தவொரு பணியடங்களையும் நிரப்ப தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு  பிறப்பித்த தீர்ப்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்கிறோம். அவர் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்குட்பட்டு துணைவேந்தராக தேர்வு செய்யப்படவில்லை.

எனவே புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் ஆளுநரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு 3 மாத காலத்துக்குள் புதிய துணை வேந்தரை சட்டத்துக்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை செல்லத்துரை மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதனை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த தீர்ப்பினை எதிர்த்து துணைவேந்தர் செல்லத்துரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

செல்லத்துரை தொடுத்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவரது மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றமானது, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவானது தங்கள் பணியினைத் தொடரலாம்; நேர்முகத் தேர்வுகளை நடத்தலாம். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை புதிய துணை வேந்தரை நியமிக்க கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com