மென்பொருள் கோளாறினால் தாமதமாகும் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் 

வாக்கு எண்ணிக்கையை ஒழுங்கு செய்ய பயன்படுத்தப்படும் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறினால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரத் தாமதமாகும் என்று தெரிகிறது.
மென்பொருள் கோளாறினால் தாமதமாகும் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் 

லாகூர்: வாக்கு எண்ணிக்கையை ஒழுங்கு செய்ய பயன்படுத்தப்படும் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறினால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரத் தாமதமாகும் என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு புதனன்று தேர்தல் நடைபெற்றது. அத்துடன் சேர்த்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர்பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும்.

இந்த தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.  இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

வாக்குப்பதிவு புதன் மாலை முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. தற்பொழுது வரை வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியானது பின் தொடர்ந்து வருகிறது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஒழுங்கு செய்ய பயன்படுத்தப்படும் மென்பொருலில் ஏற்பட்ட கோளாறினால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரத் தாமதமாகும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாபர் யாகூப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கையை ஒழுங்கு செய்ய பயன்படுத்தப்படும் 'ரிசல்ட் ட்ரான்ஸ்மிஷன் சர்வீஸ்' மென்பொருளானது அதிக வேலைப்பளுவின் காரணமாக வேலை செய்யவில்லை. எனவே எல்லா ஒட்டுப் பதிவு மைய அதிகாரிகளும் தேர்தல் முடிவுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளை சென்று சந்திக்குமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது பாதுகாப்பிற்காக அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

தற்பொழுது மென்பொருளின் சேவை சீராக இருப்பதால் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் படிவம் 45 இல்லாத காரணத்தால், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் மோசடி என்று குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com