கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க கிம் ஜோங் உன் ஒப்புதல் 

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க சம்மதம் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க கிம் ஜோங் உன் ஒப்புதல் 

சிங்கப்பூர்: கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க சம்மதம் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் உடனான சந்திப்பு சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என்ற ஒரு வார்த்தையால் மட்டும் இந்த சந்திப்பை குறிப்பிட்டு விட முடியாது, சரித்திர சந்திப்பு என்றும் கூறலாம்.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு பல மணி நேரங்கள் நீடித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது டொனால் டிரம்ப் இயல்பாக இருந்தாலும், சற்றே பதற்றமான நிலையில்தான் கிம் ஜோங் காணப்பட்டார். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதனை ஊடக நண்பர்களுக்குக் காண்பித்த டொனால்ட் டிரம்ப், அதனை கிம் ஜோங்கிடம் அளித்துவிட்டு, அவரது தோளைத் தட்டி உற்சாகப்படுத்தினார்.

இரு எதிர் நாட்டுத் தலைவர்கள் என்ற நிலையில் நிற்காமல், தான் வயதில் பெரியவர் என்ற வகையில் தனது பெருந்தன்மையை கிம்மிடம் வெளிப்படுத்தினார் டொனால்ட் டிரம்ப் என்றே இந்த செய்கையைப் பார்க்க

முடிந்தது. இரு துருவங்களின் சந்திப்பு என்பதால் மிகப்பெரிய பரபரப்பு காணப்பட்ட நிலையில், டொனால்ட் டிரம்பின் இயல்பான நடவடிக்கையால் கிம் ஜோங் - உன் உடனான சந்திப்பு ஓரளவுக்கு நல்ல முறையில் அமைந்துள்ளது.

செய்தியாளர்களின் சந்திப்பின் போது, "உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும். கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க முடிவு செய்துள்ளோம்" என வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் கூறினார்.

கிம் ஜோங் - உன்னை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருமாறு நிச்சயமாக அழைப்பேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, டிரம்ப் மிரட்டியதைப் போல தவறான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டால் சில நிமிடங்களில்கூட பேச்சுவார்த்தை முறிந்து போவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், இந்த பேச்சுவார்த்தை மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க சம்மதம் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் தனது வசமுள்ள அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கான  நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியாவில் ஆறு முறைகளுக்கு மேல் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனைகளை அந்நாடு நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com